22ஆவது திருத்தத்துக்கு எதிராகக் கொழும்பில் இன்று பிரம்மாண்டப் போராட்டம்! – ரஞ்சித் மத்தும பண்டார அறிவிப்பு.

அரசு கொண்டுவர முனையும் 22ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராகப் பொதுமக்கள் மற்றும் ஏனைய எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்குக் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாகப் பிரம்மாண்டப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

எதுல்கோட்டேயிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கு அரசைத் தவிர நாட்டில் உள்ள ஏனைய அனைத்து அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் முழுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருவதாகத் தெரிவித்த அவர், நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க இந்தச் சட்டமூலத்துக்கு மக்களின் கருத்துக்கணிப்பு நடத்தப்படுவது அத்தியாவசியமானது என்றார்.

இந்த விவகாரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் நீதித்துறையை விமர்சிக்கத் தயாராக இல்லை என்றும், உயர்நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்காகவே தாம் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், எவ்வாறாயினும் திருத்தத்தை நிறைவேற்றியே தீருவோம் என நீதி அமைச்சர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கின்றமை நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாகவே உள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நடந்து கொள்ளும் நீதி அமைச்சர் தற்போது ஒரு வேடிக்கையான மனிதராக மாறிவிட்டார் என்றும் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. கடுமையாகச் சாடினார்.

Leave A Reply

Your email address will not be published.