“பெற்றோர் நிச்சயம் மீண்டு வருவார்கள்”: துயரத்திலும் தந்தையின் கனவுக்காக NEET எழுதிய மஹாராஷ்டிரா மாணவி!

நேபாளத்தில் இயற்கை பேரழிவு ஏற்படுத்திய திடீர் வெள்ளத்தில் தனது பெற்றோர் மாயமான நிலையில், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த மாணவி ஒருவர் கண்ணீருடன் நீட் தேர்வை எழுதிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 26ஆம் திகதி சீனா – நேபாள எல்லைப் பகுதியில் பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர் நிச்சயம் திரும்பி வருவார்கள் என நம்பிக்கை
சுமார் 3,900 பேர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த 67 பேர் கொண்ட குழுவொன்று கயிலாய யாத்திரைக்காக சென்றிருந்த நிலையில், அவர்களும் வெள்ளத்தில் சிக்கிக் காணாமல் போயுள்ளனர்.

அவர்களில் வெங்கட்ராம் அன்னம்தேவரா மற்றும் அனகா அன்னம்தேவரா தம்பதியும் அடங்குகின்றனர். இவர்களின் மகளான தன்வி, பெற்றோர் காணாமல் போன சோகத்திலும் கடந்த ஆகஸ்ட் 30ஆம் திகதி நடைபெற்ற இளநிலை நீட் தேர்வை எழுதியுள்ளார்.

பெற்றோர் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பது தெரியாத நிலையிலும், தனது தந்தையின் விருப்பத்திற்காக தேர்வை எழுதச் சென்றதாகத் தெரிவித்துள்ளார்.

தேர்வுக்கு முன்னதாக அனுமதி அட்டையிலிருந்த தனது நிழற்படத்தைப் பார்த்தபோது தந்தையின் நினைவு ஏற்பட்டதாகவும், அந்த நிழற்படத்தைத் தனது தந்தையே எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தான் அழுதுகொண்டே இருந்ததாகவும், கண்ணீர் காரணமாக சில நேரங்களில் கேள்விகளைப் படிப்பதற்கும் சிரமமாக இருந்ததாகவும் தன்வி குறிப்பிட்டுள்ளார்.

தேர்வுக்கு முன்னர் தனது தாய் வழக்கமாக தயிரும் சீனியும் வழங்குவதுடன், தந்தை வாழ்த்துவார் என்றும், அவர் தெரிவித்துள்ளார்.

தனது பெற்றோர் நிச்சயம் திரும்பி வருவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ள தன்வி, அவர்கள் பாதுகாப்பாக மீண்டும் தன்னிடம் திரும்ப வேண்டும் என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.