வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களின் குடிப்பரம்பலை மாற்றும் நடவடிக்கைகள் தற்போதைய அரசின் கீழும் தொடர்கின்றன!
இலங்கைக்கான நெதர்லாந்து இராச்சியத்தின் தூதுவர் வைபே டி போயரை இன்று சந்தித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல், காணி மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பாக விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார்.
வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களின் குடிப்பரம்பலை மாற்றும் நோக்கிலான நடவடிக்கைகள் கடந்த காலங்களில் மாத்திரமன்றி, தற்போதைய அரசின் கீழும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று சாணக்கியன், தூதுவரிடம் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, மயிலத்தமடு – மாதவனை போன்ற பாரம்பரிய மேய்ச்சல் தரைப் பகுதிகளைத் தமிழ் மக்களிடமிருந்து அபகரித்து, அங்கு குடியேற்றங்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை இதற்கு முக்கியமான உதாரணமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒருபுறம் தமிழ் மக்கள் அரசியல் தீர்வை வலியுறுத்தி வருவதுடன், மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்றும் கோரி வருகின்றனர். ஆனால், அதேவேளை தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களில் பெரும்பான்மை இனக் குடியேற்றங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தொடருமானால், எதிர்காலத்தில் மாகாண சபைகள் உள்ளிட்ட எந்தவொரு அரசியல் கட்டமைப்பிலும் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவமும் அரசியல் வலிமையும் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுகின்றது என்றும் சாணக்கியன் எடுத்துரைத்தார்.
புதிய அரசமைப்பு உருவாக்கப்பட்டாலும், தமிழ் மக்களின் மக்கள் தொகை விகிதாசாரம் குறைக்கப்பட்டால், அதனால் தமிழ் மக்களுக்கு எந்தவொரு பிரயோசனமும் கிடைக்காத சூழ்நிலை உருவாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படாமல், வேறு சில விடயங்களை மட்டும் அரசின் சாதனைகளாக முன்னிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்த சாணக்கியன், எமது மக்கள் தங்களுடைய அடிப்படை அரசியல் மற்றும் வாழ்வாதார உரிமைகள் தொடர்பில் தெளிவான புரிதலுடன் அரசின் நடவடிக்கைகளை மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், மட்டக்களப்பு மாவட்டம் உள்ளிட்ட வடக்கு, கிழக்கு பகுதிகளில் நீண்டகாலமாகத் தீர்வின்றி நீடித்து வரும் காணி உரிமைப் பிரச்சினைகள், விடுவிக்கப்படாத இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள காணிகள், மகாவலி விரிவாக்கத் திட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள், வன மற்றும் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களங்களின் எல்லை நிர்ணயங்கள், தொல்பொருள் திணைக்களத்தின் நடவடிக்கைகளால் உருவாகியுள்ள காணி உரிமைச் சிக்கல்கள் உள்ளிட்ட மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை நேரடியாகப் பாதிக்கும் பல்வேறு விடயங்களையும் சாணக்கியன் விரிவாக எடுத்துரைத்தார்.
அதேவேளை, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், சுயநிர்ணய உரிமை, மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டிய அவசியம் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையில் அண்மையில் உருவாகியுள்ள அரசியல் ஒத்துழைப்பு
குறித்தும் இந்தச் சந்திப்பின்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
மேலும், ஆறு தமிழ் பேசும் கட்சிகள் இணைந்து முன்னெடுத்துள்ள அரசியல் நடவடிக்கைகளின் முக்கியத்துவம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஆறு நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் யாழ்ப்பாணத்துக்கு மேற்கொள்ளவுள்ள விஜயம் தொடர்பான விடயங்களும் சந்திப்பின்போது ஆழமாகப் பேசப்பட்டன.
வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், காணி உரிமைகள் மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பு ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதையும், இந்த விடயங்களில் சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான கவனமும் ஈடுபாடும் அவசியம் என்பதையும் சாணக்கியன், நெதர்லாந்து தூதுவரிடம் வலியுறுத்தினார்.
