மட்டக்குளியில் மூவரைக் காவு கொண்ட காரின் சாரதிக்கு 30 ஆம் திகதி வரை விளக்கமறியல்!

கொழும்பு, மட்டக்குளி – பெர்குசன் வீதியில் 3 பேர் உயிரிழந்தமைக்குக் காரணமான வீதி விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதியை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கஞ்சா போதையில் காரைச் செலுத்தி இரண்டு ஓட்டோக்கள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 52 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

வத்தளையிலிருந்து அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் 13 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி மூவர் உயிரிழந்தனர்.

விபத்து இடம்பெற்ற சமயத்தில் சாரதி கஞ்சா போதையில் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மட்டக்குளி பொலிஸார் வழக்கு தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.