தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க முடியாது: கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் அதிரடி!

பெங்களூரு,

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி செலுவராயசாமி கூறினார்.

சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு தமிழகத்துக்கு மேலும் தினமும் வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி நீரை 15 நாட்களுக்கு திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்தது. இதை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மைசூரு, மண்டியாவில் விவசாயிகள், கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து இல்லை. எனவே எப்படி தமிழகத்துக்கு காவிரி நீரை திறப்பது. இந்த விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

சாத்தியம் இல்லை
இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவு தொடர்பாக கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி செலுவராயசாமி பெங்களூருவில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், “காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தமிழகத்துக்கு மேலும் 4 ஆயிரம் கன அடி நீர் திறக்கும்படி உத்தரவிட்டுள்ளது. இது தற்போதைய சூழ்நிலைக்கு எதிராக உள்ளது. நமது அணைகளில் நீர் இருப்பு மேலும் சரிந்துள்ளது. இந்த சூழ்நிலையில் மேலும் 4 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும்படி உத்தரவிட்டால் எப்படி?.

சூப்பர் எல்நினோ, வறட்சி ஆகியவற்றால் தற்போதைய நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பது என்பது சாத்தியம் இல்லை. இதை அண்டை மாநிலமான தமிழகமும் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டால் வரும் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். இதை நாங்கள் மீண்டும் ஒருமுறை அந்த ஆணையத்துக்கு தெரிவிப்போம்” என்று அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.