“உங்களை எண்ணி நாடே பெருமை கொள்கிறது!” – 180 உயிர்களைக் காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி வீடியோ காலில் உரை!

புதுடெல்லி: நடுவானில் பறந்த விமானத்தில் 180 பேரின் உயிரை காத்த இந்திய விமானி ஸ்மித் மச்சார் உடன் வீடியோ அழைப்பில் பிரதமர் மோடி உரையாடினார். அது சமூக வலைதள பயனர்களிடம் கவனம் பெற்றுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி புதன்கிழமை (செப்.30) காலை 180 பயணிகளுடன் ‘ஃபிளை துபாய்’ விமானம் புறப்பட்டது. இதில் 174 பயணிகளும், பைலட்டுகள் 2 பேர் உட்பட 6 ஊழியர்களும் பயணம் செய்தனர். இந்திய பைலட் ஸ்மித் மச்சார் (39) விமானத்தை இயக்கினார். ஓமன் நாட்டை சேர்ந்த துணை பைலட் உடன் இருந்தார்.

திடீரென பைலட் அறையில் இருந்த கோடரியால் இந்திய பைலட் ஸ்மித் மச்சாரைத் துணை பைலட் தாக்கினார். இதில் நிலைகுலைந்த மச்சார், துணை பைலட்டை தீரத்துடன் எதிர்த்துப் போராடினார். சரியான நேரத்தில் பைலட் அறையை திறந்து, சக பயணிகளின் துணையுடன் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கவும், பயணிகளின் உயிர் காக்கவும் உதவினார். இந்நிலையில், அவருக்கு பிரதமர் மோடி உட்பட உலக தலைவர்கள் தங்களது பாராட்டினை தெரிவித்தனர்.

இந்த சூழலில் தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ள ஸ்மித் மச்சார் உடன் வீடியோ அழைப்பில் பிரதமர் மோடி உரையாடினார்.

“மக்கள் பலரது உயிரை உங்களது வீரதீர செயல் மூலம் காத்துள்ளீர்கள். உங்களை எண்ணி நாட்டு மக்கள் பெருமை கொண்டுள்ளனர். இந்தியர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து அடுத்தவர்களின் உயிரை காப்பவர்கள் என சொல்லும் வகையில் உங்கள் செயல் அமைந்தது” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

விமானி ஸ்மித் மச்சாரின் தாயார் உடனும் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவரது பிள்ளை வளர்ப்பு குறித்து சிலாகித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

“நீங்கள் என்னை தொடர்பு கொண்டு பேசுவது எனக்கு பெருமை தருகிறது. தாக்குதலில் எனக்கு அதிகளவில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் நான் செயல்பட வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். உயிருக்காக போராடிய அந்த தருணத்தில் நான் கீழே விழுந்துவிட்டேன். அந்த சூழலில் நான் எழுந்திருக்கவில்லை என்றால் இறந்து விடுவேன் என்று தெரிந்து கொண்டேன். அதுவே என்னை செயல்பட வைத்தது.

11 ஆண்டுகளாக விமான கேப்டனாக செயல்பட்டு வருகிறேன். அதனால் கண்களை மூடிக்கொண்டு இருந்தால் கூட விமானத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிய முடியும். அத்தகைய சூழலில்தான் விமானி அறையின் கதவை திறந்தேன். அதன் பின்னர் அனைவருமாக இணைந்து நடந்தவற்றை சமாளித்தோம்” என்று பிரதமர் மோடியிடம் விமானி ஸ்மித் மச்சார் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.