வீட்டில் தனியாக இருந்த யுவதி சடலமாக மீட்பு! – வங்கிக்குச் சென்று திரும்பிய பெற்றோருக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி.
கொழும்பு மாவட்டம், பாதுக்கைப் பகுதியில் தமது வீட்டில் தனியாக இருந்த 20 வயதுடைய இளம் யுவதி ஒருவர் தனது அறைக் கட்டிலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று திங்கட்கிழமை பிற்பகல் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் பாதுக்கைப் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய யுவதி எனத் தெரியவந்துள்ளது.
நேற்று மதிய வேளையில் யுவதியின் பெற்றோர் அவசியமான வங்கித் தேவைகளுக்காக வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் வீடு திரும்பிய வேளையில், தமது மகள் தனது அறையிலுள்ள கட்டிலில் அசைவற்ற நிலையில் கிடப்பதைக் கண்டு பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உடனடியாகப் பெற்றோர் மற்றும் அயலவர்கள் இணைந்து அவரை மீட்டு அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர். எனினும், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கு முன்பே அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உயிரிழந்த யுவதியின் சடலம் மீதான பிரேத உடற்கூற்றுப் பரிசோதனை இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
உயிரிழந்த யுவதியின் பெற்றோரிடமிருந்து விரிவான வாக்குமூலங்களைப் பெற்றுள்ள பொலிஸார், மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
