சிவாஜிலிங்கத்துக்குப் பருத்தித்துறை நகரில் இரங்கல் பதாகைகள் அமைத்து விசேட அஞ்சலி!
மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமான மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் பருத்தித்துறை நகரப் பகுதிகளில் விசேட இரங்கல் பதாகைகள் கட்டப்பட்டுத் துக்கம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
“வடமராட்சி மண்ணின் சிம்மக்குரல் ஓய்ந்தது!” என்ற உருக்கமான வாசகத்தின் கீழ் அன்னாரது இழப்பை நினைவுகூர்ந்து நகரின் முக்கிய சந்திப்புகள் மற்றும் மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில் இந்தப் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பருத்தித்துறை நகர் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள இரங்கல் பதாகைகள் வடமராட்சி வாழ் பொதுமக்கள், பருத்தித்துறை நகர சபை (நகராட்சி மன்றம்), பருத்தித்துறை வர்த்தகர் சங்கம், யாழ். வடமராட்சி ஊடக இல்லம் ஆகிய அமைப்புகள் மற்றும் தரப்பினரால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
வடமராட்சிப் பிரதேசத்தின் மண்ணின் மைந்தனாகவும், தமிழ் மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்த ஆளுமையாகவும் திகழ்ந்த சிவாஜிலிங்கத்தின் மறைவையொட்டி, அந்தப் பகுதி மக்களும் பொது அமைப்புகளும் தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் இறுதி மரியாதையையும் இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
