கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தமிழகத்தில் 17 மாதங்களுக்குப் பிறகு 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி, தொடக்கக் கல்வி இயக்குநரகம் பள்ளிகளுக்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அதில், பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதல்கள், புத்தாக்க பயிற்சிக் கட்டகங்கள் ஆகியவை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளன.
அதன்படி 17 மாதங்களுக்குப் பிறகு பள்ளிக்கு வரும் மாணவர்களின் மனங்களை மகிழ வைக்க 10 முதல் 15 நாட்களுக்கு கதை, பாடல், விளையாட்டு, வரைதல், அனுபவம் பகிர்தல் போன்றவற்றை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த 45 முதல் 50 நாட்களுக்கு புத்தாக்க பயிற்சிக் கட்டகங்களை நடைமுறைப்படுத்தலாம். உதாரணமாக 7-ம் வகுப்பிற்கு வரும் மாணவர்களுக்கு 6-ம் வகுப்பின் அடிப்படை பாடங்களை இந்த காலகட்டத்தில் கற்றுத்தரப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், 50 விழுக்காடு மாணவர்களுடன் பள்ளிகள் நடைபெறும் என்றும், சுழற்சி முறையில் ஒருநாள் விட்டு ஒருநாள் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் முதல் நாள் வரக்கூடிய மாணவர்கள் அடுத்த நாள் பள்ளிக்கு வரத் தேவையில்லை. முழுநாளும் வகுப்பு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் இன்று காலை முதலே மாவட்டம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. பள்ளி வளாகங்களிலும் தண்ணீர் தேங்கி உள்ள நிலையில், நாளை பள்ளிகளுக்கு மட்டும் ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் இன்று உத்தரவிட்டுள்ளார்.