ஜூன் 9ஆம் திகதி கோட்டாவைக் காப்பாற்றிய ரிவி! – கொலைசெய்யப் பாதுகாப்பு அதிகாரிகளே சதித்திட்டம்.

“ஜனாதிபதி மாளிகைக்குள் வைத்து கோட்டாபய ராஜபக்சவைக் கொல்வதற்கான ஒரு சதித்திட்டம் இருந்தது உண்மை. பாதுகாப்பு அதிகாரிகளே அந்தத் திட்டத்தை வகுத்திருந்தார்கள். ஜனாதிபதி மாளிகையில் கடந்த ஜூன் மாதம் 9ஆம் திகதியும் தங்கி நின்ற கோட்டாபய, தற்செயலாக அன்று காலை ரிவி ரிமோட்டை எடுத்து ரிவியைப் போட்டு செய்தியைப் பார்த்திருக்காவிட்டால் பின்வாசலால் தப்பியோடியிருக்கமாட்டார். அன்று போராட்டக்காரர்கள் அவரை அடித்துப் படுகொலை செய்திருப்பார்கள்.”

இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருக்கும் போது வெற்றிகரமாகச் செயற்பட்ட கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியானதும் தோல்வியடைந்தது எப்படி? கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து தப்பியோடிய அன்று நடந்தது என்ன? அவரைக் கொல்வதற்குத் திட்டம் தீட்டப்பட்டதா?அந்தத் திட்டம் முறியடிக்கப்பட்டது எப்படி? ஆகிய கேள்விகளுக்கான பதில்களை வழங்கிய போதே விமல் வீரவன்ச மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கோட்டாபய தோல்வியடையப் பல காரணங்கள் உண்டு.ஒன்று ராஜபக்ச குடும்பம். மற்றது அவரின் சகாக்கள். அதிலும் பஸில் போன்றவர்கள் கோட்டாபயவை பிழையாக வழிநடத்தியமையே தோல்விக்குப் பிரதான காரணம்.

அதேவேளை, ஜனாதிபதி செயலாளராக இருந்த பீ.பீ.ஜயசுந்தரவின் தாளத்துக்குக் கோட்டாபய ஆடியமையும் அவரின் வீழ்ச்சிக்கு ஒரு காரணம்.

அடுத்தது அமெரிக்காவும் அவரின் தோல்விக்கு ஒரு கரணம். ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்றதன் பின் அமெரிக்காவில் போய் பிள்ளைகளுடன், பேரப்பிள்ளைகளுடன் கடைசிக் காலத்தைக் கழிக்க வேண்டும் என்று விரும்பினார் கோட்டாபய. அதனால் அவர் அமெரிக்காவை அதிகம் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை.

அமெரிக்கத் தூதுவருடன் நல்ல உறவைப் பேணி வந்தார் கோட்டாபய. ஆனால், அமெரிக்கா டப்ள் கேம் ஆடியது. ஒருபுறம் கோட்டாபயவுடன் அமெரிக்கத் தூதுவர் இருப்பது போல் காட்டிக்கொண்டார். மறுபுறம், அவரைப் பதவி இறக்குவதற்காக வேலை செய்தார்.

கடந்த ஜூன் 9ஆம் திகதி காலை ஜனாதிபதி மாளிகையிலிருந்து கோட்டாபய தப்பியோடிய அன்று அவரை ஜனாதிபதி மாளிகைக்குள் வைத்தே கொல்வதற்கான ஒரு சதித்திட்டம் இருந்தது உண்மை.

போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே நின்று ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது உடன் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளிடம் பாதுகாப்பு ஏற்பாடு பற்றிக் கேட்கின்றார் கோட்டாபய. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று கோட்டாபயவிடம் அவர்கள் கூறுகின்றார்கள்.

அப்போது அருகில் இருந்த ரிவி ரிமோட்டை எடுத்து ரிவியைப் போடுகின்றார் கோட்டாபய. அந்தவேளை போராட்டக்காரர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வருவது ஒரு தனியார் சேனலில் காட்டப்படுகின்றது. ஆனால், பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு அதிகாரிகள் பொய் கூறினார்கள்.

அந்தக் காட்சியைப் பார்த்ததும்தான் கோட்டாபய பின்வாசலால் தப்பியோடினார். இல்லாவிட்டால் அவர் சிக்கி இருப்பார். போராட்டக்காரர்களால் அவர் அடித்துக் கொல்லப்பட்டிருப்பார். அவரைக் கொல்வதற்காக வகுக்கப்பட்ட திட்டம்தான் அது.

அவர் அந்தச் செய்தியை ரிவியில் தற்செயலாகப் பார்த்ததால்தான் அன்று உயிர் தப்பினார்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.