ரணிலின் ‘பட்ஜட்’ நிறைவேற்றம்! – ஆதரவு 123; எதிர்ப்பு 80.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 43 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் சற்றுமுன் நிறைவேற்றப்பட்டது.

ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 80 வாக்குகளும் பதிவாகின.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று மாலை நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை கடந்த நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் கடந்த மாதம் 15 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையிலான 7 நாள்கள் நடைபெற்றது.

கடந்த 22 ஆம் திகதி மாலை இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 121 பேரும், எதிராக 84 பேரும் வாக்களித்தனர்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதம் கடந்த 23 ஆம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்றுவந்த நிலையில் இன்று மாலை விவாதம் நிறைவடைந்து, வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.