வேலுகுமார் மீதான இடைக்காலத் தடையை உடனடியாக மீளப்பெற வேண்டும் கூட்டணி!

“தமிழ்ப் பிரதிநிதித்துவம் என்பது கண்டி மாவட்ட தமிழ் மக்களின் உயிர்நாடியாகும். அதற்குத் துளியளவும் களங்கம் ஏற்படுவதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். அது எமது உணர்வுடன் சம்பந்தப்பட்ட விடயமாகும். எனவே, நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள ‘இடைக்காலத் தடை’யை தமிழ் முற்போக்குக் கூட்டணி உடனடியாக மீளப்பெற வேண்டும்” – என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

‘ஒற்றுமை’யே பலம்பொருந்திய ஆயுதம். தமிழ் பேசும் மக்களின் இருப்புக்கான அடித்தளம். அதனை மேலும் பலமாக்கவே நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் பாடுபட்டுக்கொண்டிருக்கின்றார். அவர் ‘நடுநிலை’ வகித்த தீர்மானம்கூட, கூட்டணியின் நன்மை கருதியது. எனவே, தடம் புரண்ட – மாறிய இடத்தை சீர்செய்துகொண்டு முன்னோக்கிப் பயணித்தால் மட்டுமே இலக்கை நோக்கி நகர முடியும். அதனைவிடுத்து அவருக்கு எதிராக ‘சேறுபூசும்’ பரப்புரைகளை முன்னெடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது; கண்டிக்கத்தக்கது.

அலசி ஆராயாமல், அரசியல் சேறுபூசலுக்கு வழிவகுக்கும் வகையில் எமது கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைமைப்பீடம் எடுத்த அவசர முடிவு ஏற்புடையது அல்ல. எனவே, ‘கூட்டணியிலிருந்து இடைநிறுத்தம்’ என்ற முடிவு உடனடியாக மீளப்பெறப்பட வேண்டும். எமது இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் என்ற வகையில் கட்சி, கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தாமல் நாம் சுயாதீனமாகச் செயற்படுவோம்.

எப்போது பிளவு வரும், சரிவு வரும் என வழி மீது விழிவைத்துக் காத்திருக்கும் – பேரினவாத சக்திகளுக்குத் துணைபோகும் சில சதிகாரக் கும்பலுக்கு, தமிழ் முற்போக்குக் கூட்டணி எடுத்த முடியானது, தாக்குதலைத் தொடுப்பதற்கான சிறந்த அஸ்திரமாக அமைந்துவிட்டது. அதனை வைத்துக்கொண்டு மிகவும் மோசமான முறையில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக சமூகவலைத்தளங்களில் கூலிக்கு மாரடிக்கும் கூட்டமும் இதை வைத்துக்கொண்டு சிற்றின்பம் கண்டு மகிழ்ந்தது.

அதேபோல் ‘நடுநிலை’ என்ற நிலைப்பாட்டை அரசுக்கான ஆதரவு எனச் சிலர் அர்த்தப்படுத்தினர். இது எமது கண்டி மாவட்ட தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்துவிட்டது. அதனால்தான் தவறாக எடுக்கப்பட்ட முடிவை சரிசெய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

எமது அணி என்றும் துரோகத்துக்குத் துணை நின்றது கிடையாது. அதேபோல் அநீதிகள் அரங்கேறும் போது கைகட்டி வேடிக்கையும் பார்க்காது. கண்டி மாவட்ட தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை வென்றெடுக்கச் சந்தித்த சவால்கள் ஏராளம். அந்தப் பிரதிநிதித்துவத்தைச் சிதைப்பதற்குச் சிலர் சக்கர வியூகம் வகுத்துச் செயற்படுகின்றனர். அதற்கு ஏதோவொரு விதத்தில் எமது கூட்டணியும் துணை நின்றுவிடக்கூடாது என உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம் – என்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.