‘பட்ஜட்’ தோற்கடிக்கப்பட்டமைக்கு அரசியல் ரீதியான தீர்மானமே காரணம்!

“யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு எதுவும் இல்லை. அனைவரது கோரிக்கைகளும் உள்வாங்கப்பட்டு, சமர்ப்பிக்கப்பட்டே வரவு – செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், வரவு – செலவுத் திட்டம் வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டமைக்கு அரசியல் ரீதியான தீர்மானங்களே காரணம்.”

இவ்வாறு யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 7 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. அது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ்ப்பாணம் மாநகர சபையில் வரவு – செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பின் போது சபை அமர்வுக்கு 36 உறுப்பினர்களே வந்திருந்தனர். வாக்கெடுப்பு பகிரங்கமாக நடத்தப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 18 பேரும் எதிர்த்து வாக்களித்தனர். 11 உறுப்பினர்கள் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது வெளிநடப்புச் செய்திருந்தனர்.

அனைவரது கருத்துக்களும் உள்வாங்கப்பட்டே வரவு- செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. வரவு – செலவுத் திட்டம் தயாரிப்பாதற்கான விசேட கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்துக்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அனைவரது கருத்துக்களும் உள்வாங்கப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இருவர் முன்வைத்திருந்த கோரிக்கைகளும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த வரவு – செலவுத் திட்டத்தில் இனிமேல் திருத்தங்கள் மேற்கொள்ளவதற்கு எதுவும் இல்லை. அதனால் வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டமைக்கு அதைக் காரணமாகக் கூற முடியாது. அனைவரது கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்ட பின்னரும், வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளமை உறுப்பினர்களும், அரசியல் கட்சிகளும் தங்களின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு அமைய தீர்மானம் எடுத்துள்ளதையே காட்டுகின்றது.

இந்த வரவு – செலவுத் திட்டத்தை எதிர்த்தமைக்கான காரணத்தை எதிர்த்து வாக்களித்தவர்களே கூறவேண்டும். இந்தத் தீர்மானங்கள் மக்கள் நலன் சார்ந்து சிந்திக்காது, அரசியல் நோக்கத்துக்காக எடுக்கப்பட்ட தீர்மானம் என்றே கருதுகின்றேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அரசியல் நலனுக்காக யாழ்ப்பாணம் மாநகர சபை மேயரைப் பதவியில் இருந்து அகற்ற நினைக்கின்றது. இந்தத் தீர்மானத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி தனது அரசியல் வளர்ச்சியை முன்னிறுத்தி எடுத்திருக்கலாம். ஆயினும், இது அதன் அழிவுக்கான ஆரம்பப் புள்ளியாகவும் இருக்கக்கூடும். காலம் அனைத்துக்கும் பதிலளிக்கும் என்று நினைக்கின்றேன்.

சபையில் வெறுமனே 11 உறுப்பினர்களின் ஆதரவுடனே இரண்டு ஆண்டுகளாக சபையை நடத்தி மக்களுக்கான சேவைகளைச் செய்துள்ளோம். இரண்டாவது தடவை வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டால் சபை சட்டரீதியாகக் கலைக்கப்படும்.

அரசு உள்ளூராட்சி சபைகளைக் கலைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது என்றும் கூறப்படுகின்றது. நாம் எமது அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் விரைவில் தீர்மானிப்போம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.