இலங்கையில் வங்குரோத்து நிலைமையால் வறுமை அதிகரிப்பு! – சஜித்.

நாட்டில் நிலவும் வங்குரோத்து நிலைமையால் வறுமை அதிகரித்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

‘பிரபஞ்சம்’ வேலைத்திட்டத்தின் கீழ் 63 ஆவது கட்டமாக 50 இலட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை பஸ் ஒன்று கோட்டை, ஆனந்த மகளிர் கல்லூரிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவால் நேற்று அன்பளிப்புச் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பெற்றோர்களால் தமது பிள்ளைகளுக்குத் தேவையான புத்தகங்களைக் கூட வாங்கிக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் தமது நாளாந்த உணவுத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மூவேளை சாப்பிட்டவர்கள் தற்போது இரு வேளையும், இரு வேளை சாப்பிட்டவர்கள் தற்போது ஒரு வேளையும் சாப்பிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நாடாக எம்மால் முன்னோக்கிச் செல்ல முடியாது. நாட்டில் திருப்புமுனை ஒன்று தேவை. அது கல்வித்துறையில் ஏற்படும் மறுசீரமைப்பு சார்ந்த திருப்புமுனையாக இருக்க வேண்டும்.

தற்போது நடைமுறையிலுள்ள கல்விக்கொள்கையை மாற்றியமைக்க வேண்டும். இதனூடாக நாட்டை முதல் நிலைக்குக் கொண்டுவரும் வேலைத்திட்டம் உடனே ஆரம்பிக்கப்பட வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.