வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல்

புதிதாக இயக்கப்படவுள்ள வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். வந்தே பாரத் ரயில் மீது இது போன்ற கல்வீச்சு தாக்குதல் நடைபெறுவதால் ரயில்வே நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் சேவை திட்டத்தை இந்திய ரயில்வே பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட இந்த அதிவேக ரயில் முதல் முதலாக டெல்லி – வாரணாசி வழித்தடத்தில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து டெல்லி – காஷ்மீர், சென்னை – மைசூரு என பல வழித்தடங்களில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவுக்கு இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி ஜனவரி 19ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். செகந்தராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையே இந்த ரயில் இயக்கப்படவுள்ளது. வாரங்கல், கம்மம், விஜயவாடா, ராஜமுந்திரி ஆகிய ரயில் நிலையங்களில் இந்த புதிய வந்தே பாரத் ரயில் நின்று செல்லும். இதன் பயண நேரம் 8 மணிநேரமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் இந்தியாவின் இரண்டாவது வந்தே பாரத் ரயில் இது.

இந்நிலையில், இந்த ரயில் தனது சேவை தொடங்குவதற்கு முன்னதாகவே இதன் மீது கல்வீச்சு தாக்குதல் நடைபெற்றுள்ளது. ரயிலின் சோதனை ஓட்டம், பராமரிப்புக்காக விசாகப்பட்டினம் கொண்டு வரும் போது மர்ம நபர்கள் ரயில் மீது கல்வீசி தாக்கியுள்ளனர். இதில் இரு பெட்டிகளின் கண்ணாடி ஜன்னல்கள் சேதமடைந்துள்ளன. இது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே கோட்ட மேலாளர் உறுதி அளித்துள்ளார்.

ஏற்கனவே,கடந்த வாரத்தில் மேற்கு வங்கத்தின் ஹவுராவில் இருந்து புதிய ஜல்பைகுரி பகுதி வரை இயங்கும் வந்தே பாரத் ரயில் மீது இரு முறை கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.தொடர்ந்து வந்தே பாரத் ரயில் மீது குறிவைத்து கல்வீச்சு தாக்குதல் நடைபெறுவது அரசு மற்றும் ரயில்வே நிர்வாகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.