அரசமைப்புப் பேரவையில் தேர்தல் ஆணைக்குழுவை மாற்றுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

தற்போதுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை மாற்றுவது தொடர்பில் அரசமைப்புப் பேரவையின் கூட்டத்தில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

கடந்த ஆட்சியில் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் போது சில தொழிநுட்ப பிரச்சினைகளால் வேலை இழந்த நானூறுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (26) சந்தித்தனர். இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் செயற்பாடுகள் அரசமைப்புப் பேரவையின் ஊடாக இடம்பெறுகின்றன. இதன் மூலம் நிறைவேற்றுத்துறை, நீதித்துறை மற்றும் சட்டமன்றம் போன்றனவற்றை சமநிலைப்படுத்தும் வகையில் அரசமைப்புப் பேரவை செயற்படுகின்றது. அரசமைப்புப் பேரவைக்குப் பல பொறுப்புக்கள் இருக்கின்றன.

நேற்றுக் (25) கூடிய அரசமைப்புப் பேரவையில் தேர்தல்கள் ஆணைக்குழு தவிர்ந்த ஏனைய ஆணைக்குழுக்களின் உறுப்பினர்களுக்கு விண்ணப்பங்களைக் கோருவதாக முடிவு செய்யப்பட்டன.

தேர்தல் நடக்கும் போது தற்போதுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அதை மாற்றவே முடியாது. தற்போதுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளவாறே செயற்பட வேண்டும்.

எவ்வாறாயினும், மக்களின் இறையான்மைக்கு எதிராகச் செயற்படுவது பாரதூரமான குற்றமாகும். இது சிறைத்தண்டனை விதிக்கப்படக் கூடிய பாரிய குற்றமாகும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.