மக்களைத் துன்பப்படுத்திக்கொண்டு அக்கிராசன உரையை நிகழ்த்துவதா? புறக்கணிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து விளக்குகின்றார்.

மக்கள் மீதான தொடர்ச்சியான சுமைகளுக்கு எதிராகவே நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் அக்கிராசன உரையை நாம் புறக்கணித்தோம் என்று எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

கேகாலையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டை அழித்து நாட்டை வங்குரோத்தாக்கிய ராஜபக்சர்களைப் பாதுகாக்கும் யானை – மொட்டு கூட்டணியைக் கண்டிப்பாகத் தோற்கடிக்க வேண்டும்.

அதேவேளை, பணம் செலவிட்டு சமூக ஊடகங்களில் போலியான அலைகளை உருவாக்கி மக்களை ஏமாற்ற மற்றுமொரு குழுவினர் செயற்பட்டு வருகின்றனர். அவர்கள் குறித்தும் மக்கள் கவனம் செலுத்தி குறித்த அலைகளுக்கு மக்கள் ஏமாறாமல் இருக்க வேண்டும்.

மக்கள் மீதான தொடர்ச்சியான சுமைகளுக்கு எதிராகவே நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் அக்கிராசன உரையை நாம் புறக்கணித்தோம். மக்கள் வாழ்வை அழிக்கும் அக்கிராசன உரைகளுக்கு ஏமாறாமல் மக்களின் வாழ்வை அழிக்கும் இந்த ஆட்சிக்கு எதிராக விரைவில் மக்கள் அலையுடன் கொழும்பு வரவுள்ளோம்.

இந்நாட்டு மக்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம். வரிக்கு மேல் வரி விதிக்க வேண்டாம். மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டாம் என்று யானை மொட்டு – அரசிடம் கூறிக்கொள்கின்றோம். இந்த யானை – மொட்டு அரசை விரட்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

இந்நாட்டை வங்குரோத்தாக்கிய ராஜபக்ச குடும்பத்துக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், ராஜபக்சக்களின் அடிமைகளாக மாறிய 220 இலட்சம் மக்களும் நிர்க்கதியாகியுள்ளனர். இதுபோன்ற தருணத்தில், மக்கள் மீண்டும் 2019 ஆம் ஆண்டைப் போல் போலிகளுக்கு ஏமாற வேண்டாம். சமூக ஊடகங்கள் மூலம் செயற்கையாக உருவாக்கப்படும் சமூக ஊடக அலைகளுக்கு ஏமாற வேண்டாம்.

இந்நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் வாழவைக்கும் பொது யுகத்துக்கான ஆணையை வழங்குமாறு மக்களிடம் கோருகின்றோம்.

நாட்டின் அவதானத்தைத் திசை திருப்பி மார்ச் 9 ஆம் திகதி தேர்தலை நடத்தாதிருக்க அரச தரப்பினர் முயற்சிக்கின்றனர் என்பதால் ,அக்கிராசன உரையையோ, நாடாளுமன்ற விவாதங்களையோ பற்றி சிந்திக்காமல் ஐக்கிய மக்கள் சக்தி மக்களின் வாக்குரிமைக்காக முன்நின்று மார்ச் 9 ஆம் திகதிக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.