எப்போதும் இலவசம் தான்.. பால் விற்பனை தடை செய்யப்பட்டுள்ள இந்திய கிராமம்..!

இந்தியாவில் பால் வாங்காத, விற்காத கிராமம் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? ஆனால் உண்மையிலேயே இருக்கிறது. இந்த கிராமத்தில் யாருக்காவது பால் தேவை இருந்தால், அவருக்கு இலவசமாக பால் வழங்கப்படுகிறது. ஒரு லிட்டர் பாலின் விலை கிராம மக்களுக்கு கூட தெரியாது. இந்த வழக்கம் இன்று நேற்று இல்லை, பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

நீங்கள் இதை நம்பவில்லை என்றால், ஆந்திராவின் கர்னூல் மாவட்டம் கோங்கண்ட்லா மண்டலத்தின் கஞ்சிஹாலி கிராமத்தில் உள்ள டீ கடையில் கூட பாலின் விலையை கேட்டுப்பார்க்கலாம். ஆமாங்க.. இந்த கிராமத்தின் டீக்கடைகளில் கூட காசுக்கு பால் விற்பதில்லை. கஞ்சிஹாலி கிராமத்தில் சுமார் 1100 குடும்பங்களைச் சேர்ந்த 4750 பேர் வசிக்கின்றனர். இங்குள்ள அநேக வீடுகளில் மாடுகள், எருதுகள் சொந்தமாக வைத்து வளர்க்கிறார்கள். கிராமத்தில் மொத்தம் 120 பசுக்களும், 20 எருமைகளும் உள்ளன. தினமும் சராசரியாக ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் இங்கு உள்ள யாரும் பாலை விற்பனை செய்வதில்லை.

தங்களுக்கு தேவையானது போக மீதம் உள்ள பாலை மாடுகள் இல்லாத வீடுகளுக்கு கொடுத்து விடுகின்றனர். அதே போல வேறு யாராவது பால் தேவை என்று வந்து நின்றால் அவர்களுக்கு இலவசமாக கொடுத்து விடுகிறார்கள். இதற்கான காரணத்தைக் கேட்டால், பல ஆண்டுகளுக்கு முன் இந்த கிராமத்தில் சத்குரு மகாத்மா படே சாஹேப் என்ற ஒருவர் இருந்ததாகவும் அவர் பசுக்களை விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதில் கிடைக்கும் பாலை மக்கள் தங்கள் பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளலாம். தானமாக கொடுக்கலாம். ஆனால் விற்கக்கூடாது என்று வலியுறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. அதையே இன்று வரை இந்த கிராம மக்கள் பின்பற்றி வருகின்றனர். படே சாஹேப் தர்கா இன்றும் பலரால் வழிபடப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் பால் விற்க கூடாது என்று படே சாஹேப் கூறியதை மீறி பாலை காசுக்கு விற்றுள்ளார். அவர் சில நாட்களுக்குப் பிறகு மர்மமான முறையில் இறந்து போனதாக அந்தக் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தேவேந்திரன் கூறுகிறார். அன்றிலிருந்து அங்கு யாரும் பால் விற்பது பற்றி யோசிக்கவே இல்லையாம்! அன்றிலிருந்து கிராம மக்கள் தினந்தோறும் 3 லிட்டரில் ஒரு லிட்டர் பாலை பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு கொடுத்து விடுகின்றனர். அல்லது வேறு விதத்தில் மாற்றி பகிர்ந்து கொள்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.