ரெஜினோல்ட் குரே மரணிக்கவில்லை; அவரைக் கொலை செய்துவிட்டார்கள்! – மைத்திரி பரபரப்புக் குற்றச்சாட்டு.

“சிரேஷ்ட அரசியல்வாதியான முன்னாள் அமைச்சரும் வடக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான ரெஜினோல்ட் குரே மரணிக்கவில்லை. அவரைக் கொலை செய்துவிட்டார்கள்.”

இவ்வாறு பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன.

தெற்கு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

‘ரெஜினோல்ட் குரேவின் மரணம் சர்ச்சையைக் கிளப்புகின்றதே?’ என்ற கேள்விக்கு மைத்திரிபால சிறிசேன பதிலளிக்கையில்,

“ஆம், அவர் மரணிக்கவில்லை. அவரைக் கொலை செய்துவிட்டார்கள்.

அவர் சிரேஷ்ட அரசியல்வாதி. மேல் மாகாண முன்னாள் முதலமைச்சர். களுத்துறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். முன்னாள் அமைச்சர். வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர். இப்படிப் பல பதவிகளை வகித்திருந்த ரெஜினோல்ட் குரே மரணிக்கவில்லை. அவரைக் கொலை செய்துவிட்டார்கள்.

அவர் இறப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன் இருதய சத்திர சிகிச்சை செய்திருந்தார்.

ஒரு வாரம் கழித்து களுத்துறையில் இடம்பெற்ற தேர்தல் கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சில் அவர் கலந்துகொண்டிருந்தார்.

அவர் அங்கு செல்வதற்கு முன் என்னிடம் கூறினார். நான், “நீங்கள் போக வேண்டாம்; ஓய்வெடுங்கள். வேறு ஒருவரை அனுப்புங்கள்” என்றேன். அவர் என்னிடம் சொல்லாமல் போய்விட்டார்.

கூட்டத்தில் பெரும் சண்டை எழுந்தது. அவருக்கு எதிராகப் பலர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். அவர் கடுமையாக மனம் பாதிக்கப்பட்டு வீட்டுக்குச் சென்றார். அங்கே உயிரிழந்தார்.

உண்மையில் அவர் மரணிக்கவில்லை. கொலைசெய்துவிட்டார்கள். அதன் பின்தான் நாம் ஹெலிகொப்டர் கூட்டணியில் இருந்து விலகினோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.