மைத்திரியின் பரபரப்புக் குற்றச்சாட்டால் தெற்கு அரசியலில் பெரும் அதிர்வலை! – விமல், டலஸ் அணிகள் கடும் கொதிப்பு.

முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரேவைக் கொலை செய்துவிட்டார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள கருத்து தெற்கு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

களுத்துறை மாவட்டத்துக்கான வேட்புமனு ஒதுக்கீடு தொடர்பில் ஆராயும் கூட்டத்தில் ரெஜினோல்ட் குரே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் பங்கேற்றிருந்தார். இதன்போது அவருக்கும் மாற்று கட்சி உறுப்பினர்கள் சிலருக்கும் இடையில் கடும் தர்க்கம் ஏற்பட்டது. கெவிந்து குமாரதுங்கவுக்கும், ரெஜினோல்ட் குரேவுக்கும் இடையில் கடும் சொற்சமரும் மூண்டது.

சில தினங்களுக்கு முன்னர் இருதய சத்திர சிகிச்சை செய்திருந்த ரெஜினோல்ட் குரே, மேற்படி தர்க்கத்தால் உள ரீதியில் பாதிக்கப்பட்டு திடீரென மரணமடைந்தார். அவரின் இறப்புக்கு மாரடைப்பு எனக் காரணம் கூறப்பட்டது.

முன்னதாக ‘ஹொலிஹொப்டர்’ கூட்டணியில் இணைந்திருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேற்படி சம்பவத்தையடுத்து கூட்டணியில் இருந்து ஒதுங்கி, தனி வழி செல்லும் அறிவிப்பை விடுத்தது. இதற்குப் பல்வேறு காரணங்களும் கூறப்பட்டன.

ஆனால் ரெஜினோல்ட் குரேயின் மரணத்தையடுத்தே சு.க. முடிவை மாற்றியது என்று குறிப்பிட்டுள்ள அதன் தலைவர் மைத்திரிபால சிறிசேன, “ரெஜினோல்ட் குரே மரணிக்கவில்லை; அவரைக் கொலை செய்துவிட்டார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மைத்திரியின் இந்த அறிவிப்பு மைத்திரிபால சிறிசேன விமல்,டலஸ் உள்ளிட்ட தரப்பைக் கொதிப்படைய வைத்துள்ளது. இனிமேல் மைத்திரியை கூட்டணியில் இணைக்கக் கூடாது எனக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பலரும் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.