மருந்தே இல்லாத நாட்டில் தேர்தல் எதற்கு எனும் மன நிலையை உருவாக்குகிறது அரசு – அனுரகுமார திசாநாயக்க

நேற்று (15) இடம்பெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியினதும் , ஜனதா விமுக்தி பெரமுனவினதும் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க, நாட்டில் சத்திரசிகிச்சை செய்ய , மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்ய பணமில்லாத நிலையை நாட்டில் உருவாக்கி தேர்தலை நடத்தாமல் இருக்க தந்திரமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயல்பட்டுவருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அனுரகுமார திஸாநாயக்க கருத்து தெரிவிக்கையில்,

“மருந்து கொண்டு வர பணம் இல்லாததால் அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன என காட்டமுனைகிறார்கள். இது ஈஸ்டர் தாக்குதல் போன்றது. ஆண்டு முழுவதும் மருந்து மற்றும் உபகரணங்களை கொண்டு வருவதற்கான மொத்த செலவு 40 பில்லியன் ரூபாய். பிப்ரவரி 14 அன்று கருவூலத்திற்கு 33 பில்லியன் பணம் வந்தது. அந்த பணம் எங்கே? இன்றைய நிலவரப்படி, 67 பில்லியனுக்கும் அதிகமான பணம் வந்துள்ளது. இப்போது என்ன செய்ய முயற்சிக்கிறீர்கள்?மருந்து இல்லை …. ஆபரேஷன் செய்ய முடியாது..என காட்ட முயல்கிறீர்கள். ஆஸ்பத்திரிகளில் ஆபரேஷன் செய்ய முடியாத நாட்டில் தேர்தல் ஒன்று தேவையா எனும் ஒரு மனநிலையை உருவாக்கி இன்று நோயாளிகளை சாகடிக்கிறார்கள். அரசு மருந்தகத்தில் மருந்துகள் உள்ளன, ஆனால் தேவையான மருந்துகள் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுவதில்லை.

நாட்டில் ஒரு கருத்தை இவர்கள் உருவாக்க முயல்கிறார்கள் – மருத்துவமனையில் மருந்து இல்லை, மருந்து இல்லாத நாட்டில் ஏன் தேர்தல் வேண்டும் என மக்களையே கேட்க வைக்கிறார்கள். இதற்கும் ஈஸ்டர் தாக்குதலுக்கும் என்ன வித்தியாசம்…? ஈஸ்டர் தாக்குதலில், மக்களை கொன்று தேர்தல் ஒன்றை நடத்தினார்கள். இன்றைக்கும் இந்த ஆட்சியாளர்கள் ஆபரேஷன்களை நிறுத்தி, அறுவை சிகிச்சைகளை நிறுத்தி, அறுவை சிகிச்சைக்கு பணமில்லை என்ற கருத்தை மக்களிடம் உருவாக்கி, ஆஸ்பத்திரிக்கு ஆபரேஷன் செய்ய முடியாத நாட்டில் ஏன் தேர்தல் ஒன்றை வைக்க வேண்டும். இதற்கான மனப்போர் ஒன்று இப்போது தொடங்கப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க தனது கொடூரமான அதிகார ஆசைக்கான அரசியலில் இறங்கியுள்ளார். 10 பில்லியன் பணம் தேர்தலை நடத்த தேவைப்படும். தேர்தல் ஆணையத்திடம் பேசினோம். அதை ஆறு பில்லியனுக்குள் செய்யலாம் என்கின்றனர். மார்ச் 9 ஆம் தேதிக்கு முன்னர் அனைத்து ஆறு பில்லியன்களும் தேவையுமில்லை. அரச அச்சகத்தில் இரண்டு தேர்தல்களை நடத்த தேவையான தாள்கள் உள்ளன. வாக்குச் சீட்டுகளை அச்சிடக்கூடிய மையும் உள்ளது. எந்த நேரத்திலும் தேர்தலுக்கான பத்திரிகைகளை தயாராக்கிக் கொடுக்க அச்சகத்திலும் பணியாளர்கள் தயாராக உள்ளனர்.

ஆனால் நீங்கள் என்ன செய்ய முயற்சிக்கிறீர்கள்? நாட்டில் பணம் இல்லை, நோயாளிகள் மருத்துவமனைகளில் இறக்கின்றனர் என்று கூறுகிறார்கள். இது ரணில் விக்கிரமசிங்கவின் பைத்தியக்காரதனம். ஆபரேஷன் நின்று , செயல்பாடுகள் நின்று போன நாட்டில் தேர்தல் வைத்து என்ன பயன் என்று சமூகத்தில் ஒரு கருத்தை உருவாக்க முயல்கிறார்கள். இது ஒரு திட்டமிட்ட வேலை. மருந்துகள் மற்றும் உபகரணங்கள் வேண்டுமென்றே தடுக்கப்பட்டுள்ளன . கிராமங்களில் உள்ள மருத்துவமனைக்கு சென்றாலே குடிமகன்களுக்கு தேவையான மருந்தோ, தேவையான உபகரணங்களோ இல்லை. தலைக்கு மேல் ஈட்டியை வைத்து, ஓட்டு போட வேண்டாம் என்று சொல்ல வைக்கும் நிலைக்கு வந்து விட்டனர். இந்த பைத்தியக்காரர்கள் அதிகாரத்திற்காக இந்த நாட்டை ஆளுகிறார்கள். மக்கள் அதிகாரத்திற்காக இறக்கிறார்கள். எனவே, இந்த பைத்தியக்காரத்தனமான ரணில் விக்கிரமசிங்கவை விரட்டியடிக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.