‘மொட்டு’ படுவீழ்ச்சியடைந்ததால் ஜே.வி.பி.யுடன் மோதுகின்றோம்! – ஐக்கிய மக்கள் சக்தி விளக்கம்.

“மொட்டுக் கட்சி கடுமையாக வீழ்ந்துவிட்டது. அதனால், தேர்தல் மேடைகளில் நாம் மோதும் ஒரு கட்சியாக ஜே.வி.பி. மாறியுள்ளது.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

‘உங்களின் தேர்தல் பிரசாரத்தில் அதிகமாக ஜே.வி.பியையே தாக்குகிறீர்கள். ஏன் அப்படி?’ என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கும் போது,

“அதற்குக் காரணம் உண்டு. எங்களுக்கு ஜே.வி.பி.யுடன் தனிப்பட்ட பிரச்சினை எதுவும் கிடையாது.

தேர்தலின் போது பிரதான கட்சியுடன்தான் மோதுவது வழக்கம். பிரதான கட்சியான மொட்டுக் கட்சி கடுமையாக வீழ்ந்துவிட்டது. அதனால், நாம் மோதும் ஒரு கட்சியாக ஜே.வி.பி. மாறியுள்ளது.

ஜே.வி.பி.யினரும் தேர்தல் மேடைகளில் எங்களையே தாக்கிப் பேசுகின்றனர். இதனால் நாங்கள் அதற்குப் பதில் வழங்குகின்றோம்.

இது எமது நாட்டின் தேர்தல் கலாசாரமாக மாறிவிட்டது. மேடைகளில் விவாதங்கள் புரிவதும், ஒரு கட்சியின் கொள்கையை இன்னொரு கட்சி விமர்சிப்பதும் வழமையான ஒன்று.

இந்த அடிப்படையில்தான் இப்போது ஜே.வி.பி.யும் ஐக்கிய மக்கள் சக்தியும் மோதிக்கொள்கின்றன” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.