புதிய அரசமைப்பின் ஊடாகவே தமிழரின் பிரச்சினைகுத் தீர்வு! – அநுர தெரிவிப்பு.

“தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாகத் தீர்வை வழங்க முடியாது. அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய புதிய அரசமைப்பின் ஊடாகவே தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வைப் பெற முடியும்.”

இவ்வாறு ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

‘தமிழர்களின் பிரச்சினைகளுக்கு 13 ஆவது திருத்தத்தின் ஊடாக – மாகாண சபைகளின் ஊடாக தீர்வைப் பெற முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?’ – என்று தெற்கு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இருக்கின்ற அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாகவோ – அதில் அதிகாரத்தைக் கூட்டியோ அல்லது குறைத்தோ தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்க முடியாது.

அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய புதிய அரசமைப்பின் ஊடாகவே நிலையான – சரியான தீர்வைப் பெற முடியும்.

தெற்கு மக்கள் நிராகரிக்கும் தீர்வு ஒருபோதும் தமிழர்களுக்கான தீர்வாக அமையாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.

தற்போதைய அரசால் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வு வழங்க முடியாது. தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் தமிழர்களுக்குத் தீர்வு கிடைத்தே தீரும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.