ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் அரசு ஊழியர்கள் இல்லை – எடப்பாடி பழனிசாமி

சொந்த கட்சியினரையும், அமைச்சர்களையும் கட்டுப்படுத்த முடியாமல் கையறு நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் இருப்பதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

திருச்சி காவல்நிலையத்தில் தாக்குதல், காரைக்குடி பள்ளத்தூர் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு, ராணிப்பேட்டையில் கஞ்சா போதை ரவுடிகளின் நடமாட்டம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீராக இருந்ததாக குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி,

தற்போது தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சியா அல்லது ஜார் மன்னர் ஆட்சியா என கேள்வி எழுப்பியுள்ளார்.சட்டம் – ஒழுங்கை கட்டுக்குள் வைக்க இயலாத நிலையில் இருப்பதாக தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், காவல்நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

தொழில் நடத்துபவர்களை ஆளும் கட்சியினரும், சமூக விரோதிகளும் மிரட்டுவதாக கூறியுள்ள அவர்,தலைமையின் கட்டுப்பாட்டில் கட்சியினர் இல்லை எனவும், ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் அரசு ஊழியர்கள் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். சொந்த கட்சியினரையும், அமைச்சர்களையும் கட்டுப்படுத்த முடியாமல் கையறு நிலையில் முதலமைச்சர் இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.