ஜனாதிபதிப் பதவியை இழந்ததும் தண்டனையை அனுபவிப்பார் ரணில்! – சஜித் அணி கூறுகின்றது.

“உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீறிச் செயற்படுவதால் அவர் ஜனாதிபதிப் பதவியை இழந்ததும் தண்டனையை எதிர்கொள்ள வேண்டி வரும்.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“தேர்தலுக்காக – அதன் மூலம் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக நாம் போராடி வருகின்றோம். உயர் நீதிமன்றம் சென்று சாதகமான தீர்ப்பு ஒன்றையும் பெற்றுள்ளோம்.

நீதிமன்றத் தீர்ப்பை மீறுகின்றவர்கள் தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும். ரணில் விக்கிரமசிங்கவும் தண்டனையை அனுபவிப்பார்.

அவர் ஜனாதிபதிப் பதவியில் இருக்கும் வரை தப்பித்துக்கொள்ளலாம். பதவியை இழந்ததும் அவர் நீதிமன்றம் செல்ல வேண்டிவரும்.

மைத்திரிபால சிறிசேனவுக்கு நடந்தது தெரியும்தானே. உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் அவருக்கு எதிராக நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. அப்படித்தான் ரணிலும் தண்டனையை அனுபவிப்பார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவு என்னவாக இருக்கும் என்று அரசுக்குத் தெரியும். அதனால்தான் தேர்தலை நடத்துவதற்கு அஞ்சுகின்றது அரசு.

தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல் இல்லை என்கிறார் ஜனாதிபதி ரணில். ஜனநாயகத்தை இப்படி மீற முடியாது. தேர்தலை நடத்தினால்தான் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வருவார்கள். ஜனநாயகம் உள்ளது என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்படும்.

பொருளாதார வளர்ச்சிக்குத் தேர்தல் மிகவும் அவசியம். மஹிந்தவின் ஆட்சியில் ஜனநாயகம் மீறப்படுகின்றது என்று கூறி ஜி.எஸ்.பி. பிளஸ் இல்லாமல் போனது. பொருளாதார வளர்ச்சி என்பது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில்தான் தங்கியுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ரணிலின் ஆட்சியிலும் அது மீண்டும் இல்லாமல் போவதற்கு வாய்ப்புண்டு.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.