விவசாய திணைக்கள பெண் அதிகாரி குத்திக் கொலை : சஜித் கட்சி வேட்பாளர் கைது

“நானும் என் மகளும் பஸ்ஸைப் பிடிக்க வீதிக்கு போனபோது, ​​டேனி பேபி கல்வெர்ட்டில் உட்கார்ந்திருந்தான். எங்களைப் பார்த்துவிட்டு எங்களுக்கு எதிரே வந்தான். அவன் அவள் அருகில் வந்து திடீரென அவனது இடுப்பில் இருந்து கத்தியை எடுத்து மகளின் கழுத்தில் குத்தினான், பின்னர் அவள் முகத்திலும் , உடலின் எல்லா இடங்களிலும் குத்த ஆரம்பித்தான். நான் அதைத் தடுக்க முயன்றபோது, ​​எனக்கும் குத்த கத்தியால் முயற்சித்தான்.

மகள் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.தலையை முன்னும் பின்னுமாக தள்ளி தரையில் வீழ்ந்த மகளின் கழுத்தை டேனி பேபி (கொலையாளி) அறுத்தான். பின்னர், அவன் என்னையும் குத்திக் கொல்ல முயன்றபோது, ​​நான் ஓடி தப்பினேன். ”என விவசாய ஆராய்ச்சி உதவியாளரான தீபஷிகா லக்ருவானி விஜேதாசா கொடூரமாகக் கொல்லப்பட்டதை நேரில் பார்த்த அவரது அத்தை டி.ஜி.தயவதி, காவல்துறையின் முன் தெரிவித்துள்ளார்.

தங்காலை பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் டெனி பேபி என அழைக்கப்படும் ஜயவர்தன பத்திரனகே சரத் (வயது 41) என்பவர் , ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் பணிபுரியும் அவரது நண்பருக்கு அரசு வழங்கும் இலவச உரத்தை பெறுவதற்கான கடிதத்தைக் கொடுக்கவில்லை என கூறி , விவசாய ஆராய்ச்சி உதவியாளரான தீபஷிகா லக்ருவானி விஜேதாசாவின் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். .

சந்தேகநபர் தங்காலை பொலிஸாரால் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்றொழிலாளியான கொலையாளி, விவசாய ஆராய்ச்சி அதிகாரி தீபஷிகா லக்ருவானி விஜேதாச (30) என்பவரை பல தடவைகள் சந்தித்து, இலவச உரம் பெற்றுக்கொடுக்குமாறு கடிதம் கேட்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. வைத்தியசாலை ஊழியர் ஒருவருக்கு விவசாயி என கடிதம் ஒன்றை வழங்க முடியாது என சந்தேக நபரான டேனி பேபியிடம் அவர் தொடர்ந்து கூறியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் நேற்று (26) இரவு இரண்டு தடவைகள் தான் வசிக்கும் நெதொல்பிட்டிய வெலி ஆரை வீட்டுக்குச் சென்று உரம் எடுப்பதற்காக கடிதத்தை கேட்டுள்ளதாகவும் , அடுத்த நாள் தன் அலுவலகத்திற்கு வந்து அதைப் பற்றி பேசச் சொன்னதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று (27) காலை விவசாய ஆராய்ச்சி உதவியாளர் தனது மாமியாருடன் அலுவலகத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, ​​கொலையாளியான டேனி பேபி என்ற நபர் அவரது கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். கத்தியால் குத்தி கீழே விழுந்து வலியால் துடித்தபின்னும் , பலமுறை கழுத்தை அறுத்துள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

கத்தி குத்துக்கு உள்ளாகி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த விவசாய ஆராய்ச்சி உதவியாளரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக்கூட எவரையும் அனுமதிக்காமல் , அருகே வருவோரையும் கத்தியால் குத்த கொலையாளி முயன்றதாக போலீசார் மேலும் தெரிவிக்கின்றனர் .

கொலையான பெண் அதிகாரி வசிக்கும் வீட்டிலிருந்து 150 மீட்டர் தொலைவிலேயே இச் சம்பவம் நடைபெற்றுள்ளது. சந்தேக நபரின் குடியிருப்புக்கு முன்னால் உள்ள வீதியிலேயே கொலையான பெண் அதிகாரி கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காலை கடமைக்காக வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர் இரத்தம் தோய்ந்த கத்தியை கையில் வைத்திருந்த சந்தேக நபரைக் கட்டுப்படுத்த முற்பட்டுள்ளார். இதேவேளை, மோட்டார் சைக்கிளில் அப்பகுதியால் பயணித்துக் கொண்டிருந்த தங்காலை பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் இருவர் பெருமளவான மக்கள் திரண்டிருந்ததைக் கண்டு இதுபற்றி விசாரித்துள்ளனர். அங்கு நடந்த கொலையை பார்த்த அவர்கள், பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரியின் உதவியுடன் கடும் பிரயத்தனத்தின் பின்னர் டேனி பேபி என்ற கொலையாளியை கட்டுப்படுத்தி கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் இன்று (28) தங்காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தங்கல்ல நீதவானும் குற்றம் நடந்த இடத்தை பார்வையிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.