மழையால் ஆட்டம் நிறுத்தம் – டிஎல்எஸ் முறைப்படி பஞ்சாப் அணி வெற்றி!

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 16 ஆவது சீசன் நேற்று (மார்ச் 31) கோலாகலமாக துவங்கியது. இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், முதல் ஆட்டத்தில் கொல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரப்சிம்ரன் சிங் – தவான் ஆகியோர் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய பிரப்சிம்ரன் சிங் 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரி, 2 சிக்சர் அடங்கும். அடுத்து வந்த ராஜபக்சா தவானுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர்.

இதனால் 10 ஓவரில் பஞ்சாப் அணி 100 ரன்களை தொட்டது. 32 பந்துகளில் 50 ரன்கள் விளாசிய ராஜபக்சே கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின் களமிறங்கிய ஜிதேஷ் சர்மா 11 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்த சிறிது நேரத்திலேயே தவான் 40 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்தது. 20 ஓவர்களில் 192 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியில் மண்தீப் சிங் மற்றும் ரஹமனுல்லா குர்பாஸ் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

கடின இலக்கை துரத்தும் முயற்சியில் மந்தீப் சிங் 4 பந்துகளை எதிர்கொண்டு 2 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இவருடன் களமிறங்கிய மற்றொரு துவக்க வீரர் ரஹமனுல்லா 3 பவுண்டரிகள், 1 சிக்சர் பறக்கவிட்டு 22 ரன்களுக்கு ஆட்டமிழக்க கொல்கத்தா அணிக்கு எதிர்பார்த்த ஓபனிங் கிடைக்கவில்லை.

இவர்களை தொடர்ந்து களமிறங்கிய அன்குல் ராய் நான்கு ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுமுனையில் வெங்கடேஷ் ஐயர் நம்பிக்கை அளிக்கும் வகையில், பொறுப்புடன் ரன்களை குவித்தார். இவருடன் ஜோடி சேர்ந்த நிதேஷ் ரானா எடுத்ததும் அதிரடியில் இறங்கி 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பின் வந்த ரிங்கு சிங் 4 ரன்களில் அவுட் ஆனார். பின் களமிறங்கிய ஆண்ட்ரே ரசல் 19 பந்துகளில் 35 ரன்களை குவித்து பெவிலியன் திரும்பினார். பொறுமையாக ஆடி வந்த வெங்கடேஷ் ஐயர் 34 ரன்களுக்கு ஆட்டமிழக்க கொல்கத்தா அணி இலக்கை எட்ட போராடியது. 16 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்த கொல்கத்தா அணி 146 ரன்களை குவித்து இருந்தது.

கொல்கத்தா அணி 24 பந்துகளில் 46 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில், மழை குறுக்கிட்டதை அடுத்து ஆட்டம் தடைப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததை அடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டது. இத்துடன் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி பஞ்சாப் கிங்ஸ் அணி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.