ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தில் சிறை தண்டனை…தமிழக அரசு சட்டம் சொல்வது என்ன?

ஆன்லைன் சூதாட்ட மசோதாவை பேரவையில் அமைச்சர் ரகுபதி 2022 அக்டோபர் மாதம் 19-ந் தேதி தாக்கல் செய்தார். அது பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காததால் அவசரச் சட்டம் கடந்த நவம்பர் மாதம் காலவதியானது.

அரசு நிறைவேற்றிய சட்டத்தில் சில சந்தேகங்கள் இருப்பதாக ஆளுநர் கூறிய நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி சட்ட அமைச்சர் ரகுபதி ஆளுநரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார்.

பின்னர், 4 மாதங்கள் கழித்து, தமிழ்நாடு அரசுக்கு சட்டமியற்ற அதிகாரமில்லை என்று கூறி ஆளுநர் மசோதாவை, திருப்பியனுப்பினார். இதையடுத்து, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டப்பேரவையில் கடந்த 24- ஆம் தேதி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக மீண்டும் அனுப்பப்பட்டது. இந்த மசோதாவிற்கு தற்போது ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்தச் சட்டத்தில் தொழில்நுட்ப ரீதியாக விளையாட்டு நிறுவனத்தை கட்டுப்படுத்தும் பல்வேறு கூறுகள் உள்ளன. அதேநேரத்தில், விளையாடுபவர்களுக்கும், நிறுவனங்களுக்கும் சிறை தண்டனை வழங்கக் கூடிய கடுமையான அம்சங்களும் உள்ளன.

ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுபவருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5,000 அபராதம் அல்லது அபராதத்துடன் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.

இந்த விளையாட்டுகள் தொடர்பான விளம்பரம் செய்தால், ஒரு ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 லட்சம் அபராதம் இல்லையேல் இரண்டு தண்டனைகளும் சேர்த்து விதிக்கப்படும்.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை வழங்குவோருக்கு, 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தும் தண்டனையாக விதிக்கப்படும் என்றும் சட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை வழங்கி ஒருவர் தண்டிக்கப்பட்டு மீண்டும் அதே தவறு இழைத்தால், 5 ஆண்டுகள் சிறைதண்டனை, 20 லட்ச ரூபாய் அபராதமாகவும் விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.