தமிழ் மக்கள் சிங்கள மக்களைப் போல் சகல உரிமைகளுடனும் வாழ்கின்றார்கள்! – விமல் கண்டுபிடிப்பு.

“அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கான அமைச்சரவை உப குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. இதனைக் கைவிடவேண்டும். அதனையும் மீறி 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்த நாட்டின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத இனக்கலவரம் வெடிக்கும்.”

– இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

நல்லிணகத்தை 3 கட்டங்களாக ஏற்படுத்துவதற்காக அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார். அதில், 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதும் உள்ளடங்குகின்றது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் விமல் வீரவன்சவிடம் ஊடகங்கள் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை எக்காரணம் கொண்டும் முழுமையாக நடைமுறைப்படுத்த அனுமதிக்கமாட்டோம். அமைச்சரவை உபகுழுவை நியமித்து 13 ஐ நடைமுறைப்படுத்த ரணில் அரசு வகுத்துள்ள வியூகத்துக்கு எமது கடும் எதிர்ப்புக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தினால் இலங்கையில் வரலாறு காணாத இனக்கலவரம் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கின்றோம்.

தமிழ் மக்கள் சிங்கள மக்களைப் போல் சகல உரிமைகளுடனும் சுதந்திரமாக வாழ்கின்றார்கள். அது 13 ஆவது திருத்தச் சட்டத்தினூடாக அவர்களுக்கு நேரடி உரிமைகள் வழங்க வேண்டிய அவசியமில்லை.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.