தொழிலாளர்கள் விரும்பினால் மட்டுமே 12 மணி நேர வேலை

தொழிற்சாலைகள் சட்ட திருத்த மசோதாவால் தொழிலாளர்களுக்கான பணி நேரம், வார விடுமுறை உள்ளிட்டவைகளில் எந்த பாதிப்பும் இருக்காது என்று அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சி.வி.கணேசன் தெரிவித்தனர்.

தனியார் நிறுவனங்களில் வேலைநேரத்தை 12 மணிநேரமாக உயர்த்தி, தொழிலாளர் சட்ட விதிகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்தது. அதன்படி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் கணேசன் தாக்கல் செய்தார். அப்போது, வேலை நேரத்தை உயர்த்துவதற்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன.

இதுதொடர்பாக பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன், தற்போது நடைமுறையில் உள்ள 1948ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டம் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றார். தினசரி வேலை நேரம் , ஊதியம், வாராந்திர விடுமுறை உள்ளிட்டவற்றில் எந்த மாற்றமும் இன்றி தற்போது நடைமுறையில் இருப்பது தொடர்ந்து நீடிக்கும் என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வரும் நிறுவனங்கள் சில சலுகைகளை அரசிடம் இருந்து எதிர்பார்ப்பதாகவும், இதன்மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்றார்.

தொழிலாளர்களை 12 மணிநேரம் வேலை செய்யவேண்டும் என்று நிறுவனங்கள் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.