திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற அனுமதி!

திருமண மண்டபங்கள், விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற அனுமதிக்கும் வகையில் சிறப்பு உரிமம் வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே கிளப்புகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களுக்கு மட்டுமே மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருமண மண்டபங்கள், விருந்து அரங்குகள், வீடுகளில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களிலும் மதுபானம் பரிமாறுவதற்கு சிறப்பு உரிமம் வழங்க வசதியாக தமிழ்நாடு மதுபானம் விதிகளில் தமிழ்நாடு அரசு திருத்தம் செய்துள்ளது. இந்த சிறப்பு உரிமம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு செல்லுபடியாகும் என்றும் உரிமக் கட்டணம் செலுத்திய பிறகு ஆட்சியர் ஒப்புதலுடன் சிறப்பு உரிமம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு உரிமம் பெற்றவர் மாநகர காவல் ஆணையரிடம் ஆட்சேபனை இல்லாச் சான்றிதழை பெற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.இந்த உரிமம் பெற்றவர்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானம் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்களை விருந்தினருக்கு பரிமாறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.