பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்ற டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது.

பஞ்சாப் மாநிலத்தில் 553 கி.மீ. தொலைவுக்கான இந்தியா- பாகிஸ்தான் எல்லை பகுதியை பாதுகாப்பு படையினர் பாதுகாத்து வருகின்றனர். இப்பகுதியில் சில ஆண்டுகளாகவே டிரோன் மூலம் அச்சுறுத்தல்கள் அரங்கேறி வருகின்றன. எல்லை தாண்டிய பயங்கரவாத பிரச்சினையால் இந்தியா பல ஆண்டுகளாகவே நேரடியாக பாதிப்புக்கு ஆளான நிலையில், போதைப்பொருள், ஆயுத கடத்தல் போன்ற மறைமுக சாவல்களையும் எல்லையில் வீரர்கள் சந்தித்து வருகின்றனர்.

தற்போது தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்ற காலம் என்பதால், டிரோன்கள் மூலம் இவை பாகிஸ்தானில் இருந்து கடத்தப்பட்டு இந்தியா கொண்டு வரப்படுகின்றன. முதன் முதலாக 2019-ம் ஆண்டு பஞ்சாப் எல்லையில் டிரோன் மூலம் போதைப்பொருள் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், அமிர்தசரஸ் பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புல்மோரானில் உள்ள தனோவா கலன் கிராமத்தில் பாகிஸ்தானின் டிரோன் பறந்து வந்ததை எல்லை பாதுகாப்பு படையினர் பார்த்தனர். இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற அந்த டிரோனை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். இதில் டிரோன் நொறுங்கியது. இதில் 2 கிலோ ஹெராயின் இருந்ததை கண்டுபிடித்தனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.