கீழே விழுந்த சிறுவனுக்கு தையல் போடாமல் பெவிகுவிக் போட்டு ஒட்டிய மருத்துவர்…!

தெலங்கானாவில் கீழே விழுந்து காயம் ஏற்பட்ட இடத்தில் தையல் போட்டு சிகிச்சை அளிப்பதற்கு பதிலாக பெவிகுயிக் போட்டு ஒட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கத்வேல் மாவட்டத்தில் உள்ள அலம்பூர் நகரை சேர்ந்த விவசாயி வம்சி கிருஷ்ணாவின் மகன் பிரணவ் கால் தவறி கீழே விழுந்ததில் அவருக்கு புருவத்தில் அடிபட்டது.

இதனால், சிகிச்சைக்காக மகனை வம்சி கிருஷ்ணா அங்குள்ள ரெயின்போ மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு பணியில் இருந்த மருத்துவர் மற்றும் ஊழியர்கள் காயம் ஏற்பட்ட இடத்தில் தையல் போட்டு சிகிச்சை அளிப்பதற்கு பதிலாக பெவிகுயிக்கை பூசி ஒட்டி அனுப்பி வைத்தனர்.

கண் புருவத்தில் தையல் போட்டு சிகிச்சை அளிக்காமல் அந்தப் பகுதி ஒட்டப்பட்டு இருப்பதால் சந்தேகம் அடைந்த வம்சி கிருஷ்ணா மகனை வேறொரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தார். அங்கு பிரணவை பரிசோதித்த மருத்துவர்கள் அவருடைய புருவத்தை பெவிகுயிக் மூலம் ஒட்டி இருப்பதை கண்டறிந்தனர்.

எனவே அதனை அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் என்று தெரிவித்தனர். தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்து கண் புருவத்தை ஒட்ட பயன்படுத்தப்பட்ட பெவிகுயிக் அகற்றப்பட்டது. இந்த சம்பவம் பற்றி வம்சி கிருஷ்ணா அளித்த புகாரின் பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ரெயின்போ மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.