புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியவர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வீடியோ வெளியிட்ட யூடியூபர் மணீஷ் காஷ்யப் மீதான தேசிய பாதுகாப்பு வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

தமிழ்நாட்டில் வாழும் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வட இந்தியாவிலுள்ள சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிடப்பட்டன. வேறு மாநிலங்களில் முன்னர் நடைபெற்ற தாக்குதல் வீடியோக்கள் தமிழ்நாட்டில் நடைபெற்றதாக வீடியோக்களும் பரப்பப்பட்டன.

பீகார் மாநில பாஜக ட்விட்டர் தளத்திலும் இந்த கருத்துகள் பகீரப்பட்டன. அதனால், தமிழ்நாட்டில் அசாதாரண சூழல் ஏற்பட்டது. இங்குள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் அச்சம் கொள்ளும் சூழல் ஏற்பட்டது. பீகாரிலிருந்து அதிகாரிகள் அடங்கிய சிறப்புகள் குழு வந்து ஆய்வு செய்தது.

கடந்த பிப்ரவரி- மார்ச் மாதங்களில் உண்மைக்கு புறம்பான வகையில் யூடியூபர் மணீஸ் காஷ்யப் யூடியூபில் வீடியோ வெளியிட்டிருந்தார். இதுவும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மணீஷ் காஷ்யப் மீது தமிழ்நாடு, பிகார் உள்ளிட்ட இடங்களில் 19 FIRகள் பதிவு செய்யப்பட்டன.

இவற்றை ஒன்றாக இணைத்து பிகாரிலேயே விசாரணை நடத்த வேண்டும் என்று காஷ்யப் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், தமிழ்நாடு அமைதியான மாநிலம் என்றும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் யாரும் செயல்படக்கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.

விசாரணை தனித்தனியாகத்தான் நடைபெற வேண்டும் என்றும், மனுதாரர் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு அரசை அணுகி நிவாரணம் கேட்கலாம் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் மனுதாரரின் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.