நோய்ப் படுக்கையில் இருந்து கொண்டு அரசாங்கத்திற்கு பணம் வழங்கிய 86 வயது முதியவர்

பொலன்னறுவையை சேர்ந்த முன்னாள் கிராம சபை உறுப்பினர் எஸ்.பி. ஹேவாஹெட்ட, கொரோனா நிதியத்திற்கு 5,000 ரூபா நிதியுதவி வழங்கியுள்ளார்.

அந்தப் பணத்துடன் கடிதம் ஒன்றை அவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு அனுப்பியுள்ளார்.

86 வயதான எஸ்.பி. ஹேவாஹெட்ட அம்பியூலன்ஸ் வண்டியில் இருந்தவாறு இந்தக் கடிதத்தை எழுதியுள்ளதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண முறைமை குறித்து தாம் ஆச்சரியமடைந்து, 5000 ரூபா நிதியை அந்த நிதியத்தில் வைப்பிட்டு தம்மையும் அந்த கைங்கரியத்தில் இணைத்துக்கொள்ளுமாறு கடிதத்தில் அவர் கோரியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ஹேவாஹெட்ட வழங்கிய நிதியை அவரது கரங்களால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிக்கத் தேவையான நடவடிக்கைகளை பிரதமர் முன்னெடுக்கவுள்ளார்.

அதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Comments are closed.