கஜேந்திரகுமாருக்காகச் சபையில் குரல் கொடுத்த சஜித்! – எம்.பியின் சிறப்புரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.

“நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைக் கைது செய்யும்போது பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகள் தொடர்பில் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதியன்று அப்போது சபாநாயகராகப் பதவி வகித்த சமல் ராஜபக்ச தீர்ப்பொன்றை வழங்கியுள்ளார். நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க வரும் எம்.பியைக் கைது செய்ய முடியாது. அந்தவகையில் நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு கஜேந்திரகுமார் எம்.பிக்கு உரிய சிறப்புரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.”

இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ.

“நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அரசியல் கொள்கை, நடவடிக்கை தொடர்பில் எமக்கு முரண்பாடு உள்ளது. அவை தொடர்பில் மாறுபட்ட நிலைப்பாட்டில் நாம் உள்ளோம். சிறப்புரிமை சட்டத்தின் பிரகாரம், நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்கும் உரிமை அவருக்கு இருக்கின்றது. எனினும், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுக்கு வழிவகுத்த சம்பவம் சரியா, தவறா என நான் வாதிடவில்லை. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உங்களுடனும் (சபாநாயகர்) கதைத்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்ற பின்னர், பொலிஸ் நிலையம் வருவதாகக் கூறியுள்ளார். ஆனாலும் கைது இடம்பெற்றுள்ளது. அவர் நாடாளுமன்றம் வருவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். நாடாளுமன்றம் வரும்போது எம்.பியொருவரைக் கைது செய்ய முடியாது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.