உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு: ஊழியர் சேமலாப நிதியத்தில் கைவைக்கின்றது அரசு! – கட்சித் தலைவர்களிடம் மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கான ஊழியர் சேமலாப நிதியத்திலேயே (ஈ.பி.எஃப்.) பிரதானமாக இலங்கை அரசு கைவைத்துள்ளது. உள்நாட்டு கடனின் பெரும் பகுதியை அண்ணளவாக 93 சதவீதத்தை அதிலிருந்தே மறுசீரமைக்கவுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசேகர தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் கொழும்பில் நேற்றிரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான அறிவித்தலைப் பார்த்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தானும் அதில் கலந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவித்திருந்தார். அதற்கு அமைவாக அவரும், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இலங்கையின் மத்திய வங்கி ஆளுநர் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு எவ்வாறு முன்னெடுக்கப்படப் போகின்றது என்பது தொடர்பில் விளக்கமளித்தார்.

ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்தே பெரும் பகுதியை – அண்ணளவாக 93 சதவீதத்தை எடுத்துக் கடனை மறுசீரமைக்கவுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டார். வங்கிகளின் கடன்களிலிருந்து மறுசீரமைக்க முற்பட்டால் அது பெரும் தாக்கத்தை ஏற்படும். இதனால் ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்தே மறுசீரமைப்பை முன்னெடுக்க வேண்டியுள்ளதாக அவர் நியாயப்படுத்தியுள்ளார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சித் தலைவர்கள், ஊழியர் சேமலாப நிதியத்தில் கைவைக்கப் போவதில்லை என்று முன்னர் அரசு வழங்கிய உறுதிமொழிகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பில் விசனம் வெளியிட்டதுடன், வேறு வகையில் இதனை முன்னெடுக்க முடியுமா? என்பது தொடர்பாகவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வேறு தெரிவுகள் இல்லாமையாலேயே ஊழியர் சேமலாப நிதியத்தில் கைவைக்க வேண்டி ஏற்பட்டதாக ஆளுநர் விளக்கமளித்துள்ளார்.

“ஊழியர் சேமலாப நிதியத்தில் கைவைத்தால் தனியார்துறை ஊழியர்கள் பெரும் பாதிப்பை எதிர்கொள்வார்கள். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. நாம் எதிர்த்துத்தான் வாக்களிப்போம்” – என்று இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.