வக்னரது நடவடிக்கையால் , உக்ரைன் போரின் போக்கு மாற்றுமா?

ரஸ்யாவில் பெரும் பிரளயம் ஒன்று நடைபெற்று முடிந்திருக்கின்றது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் ஒன்றுக்கு எதிராக தனியார் இராணுவக் குழுவான வக்னர் மேற்கொண்ட சதி 24 மணி நேர இடைவெளியில் முறியடிக்கப்பட்டு இருக்கிறது.

அதிலும், அயல் நாடொன்றில் போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஒரு தேசத்தில் இவ்வாறான ஒரு விரும்பத்தகாத சூழ்நிலை உருவாகியமை உள்நாட்டில் மாத்திரமன்றி வெளிநாடுகளிலும் ஒரு பதட்டமான சூழலைத் தேற்றுவித்திருந்தமையை அவதானிக்க முடிந்தது. பெரும் மோதல் ஒன்று தவிர்க்கப்பட்டமையை இட்டு உள்நாட்டில் மகிழ்ச்சி நிலவினாலும், ரஸ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் சரிவைப் பெரிதும் எதிர்பார்த்திருந்த உக்ரைன் மற்றும் அதன் ஆதரவு நாடுகள் மத்தியில் கவலை உருவாகி உள்ளமையை உணர முடிகின்றது.

முதலாவது கேள்வி, இத்தகைய ஒரு நிலைமை எவ்வாறு உருவாகியது என்பது. அடுத்த கேள்வி தோல்வியைத் தழுவிய சதியின் பின்னணியில் அந்நிய சக்திகள் உள்ளனவா என்பது? இத்தகைய நிலை உருவானதால் நன்மை யாருக்கு என்ற மூன்றாவது கேள்விக்கு சிரமப்பட்டு விடை தேடத் தேவையில்லை. அது வெளிப்படையாகவே தெரிந்து விட்டது. குறித்த சதி நடவடிக்கை தொடர்பான செய்திகள் வெளியான போதில் உக்ரைன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் தலைவர்களிடம் இருந்து வெளிவந்த கருத்துகளே அதனை உறுதி செய்யப் போதுமானவை. அது மாத்திரமன்றி குறித்த சதி முயற்சி பற்றி உக்ரைன் மற்றும் அமெரிக்கத் தரப்புகள் ஏற்கனவே தெரிந்து வைத்திருந்தன என பிந்திக் கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தனியார் இராணுவக் குழுவான வக்னர் உக்ரைன் போரில் இணைந்து கொண்ட நாள் முதலாகவே ரஸ்யப் படைத் துறைக்கும், குறித்த குழுவுக்கும் இடையில் முரண்பாடுகள் நிலவியதை அவ்வப்போது செய்திகள் வாயிலாக அனைவரும் அறிந்திருப்போம். போர் ஒன்றில் ஈடுபடும் எந்தத் தரப்பாயினும் வெற்றியைப் பகிர்ந்து கொள்ள விரும்புவதில்லை என்பது பொதுவான விதி. உக்ரைன் போர்முனையும் இதற்கு விதிவிலக்கானதல்ல. உக்ரைன் களத்தில் ரஸ்யப் படைத்துறையே மிகுந்த பலத்துடன் விளங்கினாலும், சில சமர்களில் வக்னர் குழுவினர் தீரத்துடன் செயற்பட்டு வெற்றிகளைப் பெற்று இருந்தமை அறிந்ததே.

அது மாத்திரமன்றி பெருமெடுப்பில் நடைபெறும் போர்களில் படைத்துறை அதிகாரிகள் மத்தியிலும் ஒத்த கருத்து நிலவுவதில்லை என்பது உலகப் பொது விதியாக உள்ளது. உக்ரைன் மீதான படை நடவடிக்கையிலும் இத்தகைய போக்கு பல தடவைகளில் வெளிப்பட்டு உள்ளது. குறிப்பாக ரஸ்யப் படையினரின் மெத்தனமான நடவடிக்கைகள் தொடர்பில் விமர்சனங்கள் வெளியாகி இருந்தமை ஒருபுறம் இருக்க, வக்னர் குழுவுக்குத் தேவையான போர்த் தளபாடங்களை போதுமான அளவு வழங்குவதிலும் பின்னணி ஆதரவு தருவதிலும் ரஸ்யப் படைத்துறை அமைச்சு முறையாகச் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் பல தடவைகள் பொது வெளியில் வைக்கப்பட்டிருந்தமையும் தெரிந்ததே.

யூன் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சதி நடவடிக்கை மறுநாளில் முடிவுக்கு வந்திருக்கின்றது.

வக்னர் குழுவின் தலைவர் பிறிகோசினுக்கும் பெலாரஸ் நாட்டு அதிபர் அலெக்சான்டர் லுகஷென்கோவுக்கும் இடையில் – விளாடிமிர் புட்டினின் ஏற்பாட்டில் – இடம்பெற்ற பேச்சுக்களைத் தொடர்ந்து உருவான கருத்தொற்றுமையின் விளைவாகவே உடன்பாடு எட்டப்பட்டது.

இந்த உடன்பாட்டைத் தொடர்ந்து ஆயுத மோதல் முடிவுக்கு வந்திருந்தாலும், வக்னர் குழு உறுப்பினர்களின் எதிர்காலம் தொடர்பில் ஒரு முடிவு எட்டப்பட்டிருந்தாலும், நடைபெற்ற நிகழ்வுகளால் உருவான தாக்கம், பாதிப்பு என்பவை ரஸ்ய அரசியலில் அழிக்கமுடியாத ஒரு தடத்தைப் பதித்துள்ளதை மறுப்பதற்கில்லை.

ரஸ்யாவின் அரசியல் தலைமையை மாற்றுவதை தமது வெளிப்படையான இலக்குகளுள் ஒன்றாகவே மேற்குலகம் கொண்டுள்ளது என்பது தெரிந்ததே. அதற்கான ஒரு அருமையான வாய்ப்பாக பிறிகோசினின் கலகம் அமைந்திருந்தது. 3 இலட்சத்துக்கும் அதிகமான படையைக் கொண்டுள்ள ஒரு நாட்டில் வெறும் 25,000 பேரை வைத்துக் கொண்டு – மக்கள் பலம் எதுவும் இன்றி – ஆட்சியைப் பிடிப்பது என்பது சாதாரண விடயமல்ல. அது தெரிந்தும் முயற்சி நடைபெற்றிருக்கின்றது. சில வேளைகளில் தமது செயற்பாட்டுக்கு வெளியில் இருந்து அல்லது உள்நாட்டில் இருந்து கூட ஏதாவது உதவிகள் கிடைக்கக் கூடும் என பிறிகோசின் நினைத்திருக்கக் கூடும்.

ஆனால், பாரிய இழப்பு இன்றி இந்த அவல நாடகம் முடிவுக்கு வந்திருக்கின்றது. பிறிகோசினின் படையினர் மீது ரஸ்ய ஆயுதப் படையினர், விமானப் படையினர் மேற்கொண்ட தாக்குதல்கள் மூலம் ஏற்பட்ட இழப்பு விபரங்கள் இன்னமும் சரியாக வெளியாகவில்லை. ஆனால், வக்னர் குழுவினர் மேற்கொண்ட தாக்குதல்களில் 5 உலங்கு வானூர்திகளும் ஒரு விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் விமானிகள் உள்ளிட்ட 13 படையினர் மரணித்ததாகவும் செய்திகள் வெளியாக உள்ளன. இந்தத் தாக்குதல்கள் மற்றும் பதில் தாக்குதல்களில் பல குடியிருப்புகள் சேதமடைந்ததாகவும் 3 பொதுமக்கள் வரை காயமடைந்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதுவாயினும், ரஸ்யாவைப் பொறுத்தவரை புட்டின் ஒரு ‘இரும்பு மனிதன்’ அல்ல என்பது தெளிவாகி உள்ளது. சொந்த நாட்டில் எதிர்ப்பதற்கு யாருமே இல்லாத ஒரு தலைவர் என அவர் தன்னை இனிக் கருதிக்கொள்ள முடியாது. அது மாத்திரமன்றி, எதிர்ப்பு இத்தோடு முடிந்து விட்டது எனக் கருதி அவரால் நிம்மதியாகவும் இருந்துவிட முடியாது.

உக்ரைன் களமுனையில் இருந்து வக்னர் குழுவினர் வெளியேறி உள்ளனர். இது உக்ரைன் படையினரைப் பொறுத்தவரை ஒரு சாகமான அம்சம். ஆனால், அவர்கள் அதனைப் பயன்படுத்திக் கொண்டதாகத் தெரியவில்லை. களமுனையில் மோதல்கள் தொடருகின்ற போதிலும் மாற்றங்கள் எதனையும் அவதானிக்க முடியவில்லை. மறுபுறம், வக்னர் குழுவினரின் கலகம் தொடர்பான செய்திகள் உக்ரைன் படையினரின் பதில் தாக்குதல்கள் வெற்றிகள் எதனையும் பதிவு செய்யவில்லை என்ற செய்தியை அமுக்கி விட்டதை அவதானிக்க முடிகின்றது.

அதேவேளை, உக்ரைன் போர் 16 மாதங்களாக பெரும் அழிவுகளுடன் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. மேற்குலகம் தன்னிடம் உள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தி உக்ரைனின் வெற்றியை உறுதி செய்ய எடுக்கும் முயற்சிகள் இதுவரை பயனளித்ததாகத் தெரியவில்லை. மறுபுறம், ரஸ்யத் தரப்பும் பாரிய வெற்றிகள் எதனையும் பெற்றுவிடவில்லை.

பிறிகோசினின் சதி முயற்சி மேற்குலகின் கடைசி ஆயுதமாகக் கூட இருக்க வாய்ப்புண்டு. அதுகூடக் கைகொடுக்காத நிலையில் பேச்சுக்கள் மூலம் ஒரு மோதல் தவிர்ப்புக்குச் செல்ல மேற்குலகம் முயலக் கூடும். ஏற்கனவே இது தொடர்பில் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் பல உலா வருகின்றன.

ரஸ்யாவைப் பொறுத்தவரை பிறிகோசின் வழங்கிய அதிர்ச்சி வைத்தியம் அந்த நாட்டின் போர் முனைப்பு தொடர்பில் மறுபரிசீலனை செய்ய நிர்ப்பந்திக்கலாம்.

எது நடந்தாலும் உக்ரைன் போர் முடிவுக்கு வருவது உலக மாந்தர் அனைவர்க்கும் மகிழ்ச்சி தரும் செய்தியே. நடக்குமா?

Leave A Reply

Your email address will not be published.