கேரளா முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி மரணம்

கேரளா மாநிலம் புதுப்பள்ளி கே.ஓ.சாண்டி – பேபி சாண்டி தம்பதியினருக்கு 1943-ம் ஆண்டு அக்டோபர் 31-ம்.தேதி கோட்டயம், குமரகத்தில் பிறந்தார் உம்மன் சாண்டி. பள்ளி படிக்கும்போதே மாணவர் காங்கிரஸில் இணைந்து செயல்பட்டார். 1970-ல் தனது 27-ம் வயதில் புதுப்பள்ளி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார்.

சி.பி.எம் கோட்டையான புதுப்பள்ளியில் எம்.எல்.ஏ-வாக இருந்த இ.எம்.ஜார்ஜ் என்பவரை தோற்கடித்ததால் உம்மன்சாண்டி மீதான மதிப்பு தொண்டர்களுக்கு இன்னும் அதிகரித்தது. 2004-ல் ஏ.கே.ஆன்றணி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, கேரள முதல்வரானார் உம்மன் சாண்டி. 2006 முதல் 2011-வரை எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். 2011-ல் மீண்டும் முதல்வர் ஆனார். இருமுறை கேரள முதல்வராக இருந்த உம்மன்சாண்டி, சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக புதுப்பள்ளி தொகுதியிலிருந்து எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுவந்தார்.

ஏற்கனவே அவருக்கு கேன்சர் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் இருந்து வந்தன. பெங்களூரில் சின்மயா மிஷன் மருத்துவமனையில் நிமோனியா பாதிப்பால் சிகிட்சை பெற்று வந்த நிலையில் உம்மன்சாண்டி, இன்று அதிகாலை 4.25 மணிக்கு காலமானார். இன்று கேரளா மாநிலத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 2 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உடல் மதியம் 2 மணி அளவில் பெங்களூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரத்திற்கு கொண்டு வரப்படும். இன்று திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் உடல் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படும். நாளை மறுநாள் சொந்த ஊரான புதுப்பள்ளியில் இறுதி சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.