அதிகாரப் பகிர்வு, மாகாண சபைத் தேர்தல்: அன்றிலிருந்து எமது நிலைப்பாடு ஒன்றே! – சுமந்திரன் எம்.பி. அறிக்கை.

“மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும். அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முதலாவது சர்வகட்சிக் கூட்டத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகின்றது.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கடந்த வாரம் இடம்பெற்ற சர்வகட்சிக் கூட்டத்தில் அதிகாரப் பகிர்வா? மாகாண சபைத் தேர்தலா? என்பதை தமிழ்த் தரப்புக்கள் முடிவு செய்து வரவேண்டும் எனவும், ஒவ்வொரு தடவையும் ஒவ்வொன்றைக் கோரி குழப்புகின்றன எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். இந்தநிலையிலேயே இது தொடர்பில் சுமந்திரன் எம்.பியால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“1956 முதல் ஒவ்வொரு தேர்தலிலும் வெளிப்படுத்தப்படும் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு இணங்க, சமஷ்டிக் கட்டமைப்பில் அதிகாரப் பகிர்வு இருக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் இலங்கையின் அரசமைப்பின் ஒரு பகுதியே தவிர, ஒரு தனி இணைப்பு அல்ல. ஜனாதிபதி மற்றும் நாம் அனைவரும் அதை நிலைநிறுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் சத்தியப்பிரமாணம் செய்துள்ளோம். அரசமைப்பின் ஒரு பகுதியை நடைமுறைப்படுத்தாதது விடுவது என்பது அரசமைப்பு முழுவதையும் மீறுவதாகவே அமையும்.

அரசமைப்பில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு நாம் வலியுறுத்துகின்றோம். எனினும், அது தமிழ் மக்களின் நியாயமான அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யாது.

அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டை பல்வேறு செயல்முறைகள் மூலம் அர்த்தமுள்ளதாக்க வேண்டும் என்பது, மங்கள முனசிங்க தெரிவுக்குழுவில் இருந்து 2016 – 2019 வரை அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் இடம்பெற்ற அரசமைப்பு பேரவை வரை மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பதவிக்காலத்தின் போது இந்தியாவுடன் குறைந்தபட்சம் மூன்று தனித்தனி கூட்டு அறிக்கைகள் மூலம் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையிலான தேர்தல் சீர்திருத்தத் தெரிவுக்குழு கடந்த வருடம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், மூன்று வருடங்களுக்கும் மேலாக இடைநிறுத்தப்பட்டுள்ள மாகா சபைத் தேர்தல், மக்களின் ஜனநாயக உரிமையை மறுப்பதாக இனங்கண்டு முன்பு இருந்த விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் தேர்தலை நடத்த வேண்டும் எனப் பரிந்துரை செய்ததோடு இதைச் செயற்படுத்த தகுந்த சட்டம் இயற்ற வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.

இந்தப் பரிந்துரைகளுக்கு இணங்க நான் ஒரு தனி நபர் சட்டவரைவை தயாரித்து முன்வைத்திருந்தேன். அதன் முதல் வாசிப்பு முடிந்த நிலையில் சட்ட வரைவு உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டது. மேலும் இதில் உள்ள சில சரத்துகளில் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களைச் செய்தால், அதனை நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை மூலம் சட்டமாக்க முடியும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

2022ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் திகதி இடம்பெற்ற முதலாவது சர்வகட்சி மாநாட்டிலேயே மாகாண சபைத் தேர்தலை இனியும் தாமதிக்காமல் நடத்த வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெளிவாக ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தது. அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்.

ஜனாதிபதியுடன் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன், 2023ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் திகதி நடைபெற்ற இரண்டாவது சர்வகட்சி மாநாட்டில் மீண்டும் எமது நிலைப்பாட்டை வலியுறுத்தினோம். கடந்த ஜூலை 26ஆம் திகதி நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டிலும் இதே நிலைப்பாட்டையே தெரிவித்தோம்.

இவ்விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. அவ்வாறே உடனடியாக மாகாண சபைத் தேர்தல்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட மற்றும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுக்கு அழைப்பு விடுப்பதற்கும் இடையில் எந்த முரண்பாடும் இல்லை. மேலும் கூறுவதானால் ஒன்று இல்லாது மற்றொன்றில் எவ்வித அர்த்தமும் இல்லை.” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.