செருப்பை கழட்டி தன்னைத்தானே கன்னத்தில் அடித்துக் கொண்ட கவுன்சிலர்

செருப்பை கழட்டி நகராட்சி கவுன்சிலர் ஒருவர் தன்னைத் தானே அடித்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கான பின்னணி காரணம் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் நர்சிபட்டனம் என்ற நகராட்சி உள்ளது. இங்கு 20 ஆவது வார்டில் கவுன்சிலராக இருப்பவர் முளபார்த்தி ராமராஜு. இவர் நகராட்சி கூட்டத்தின்போது தனது செருப்பால் தன்னைத் தானே அடித்துக் கொண்டார். இதனால் சக கவுன்சிலர்கள் மற்றும் சேர்மன் உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் எதற்காக செருப்பால் தன்னைத் தானே அறைந்து கொண்டது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், நான் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டு 31 மாதங்கள் ஆகின்றன. இருப்பினும் என்னால் பொதுமக்கள் பிரச்னைகளான கழிவு நீர் கால்வாய், மின்சாரம், சுகாதாரம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை எனது வார்டுக்கு ஏற்படுத்தி தர முடியவில்லை. இதற்காக என்னை நானே செருப்பால் அடித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

40 வயதாகும் ராமராஜு ஆட்டோ ஓட்டி வருகிறார். தனக்குள்ள அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தியதாகவும் இருப்பினும் தன்னால் தனது வார்டு மக்களுக்கு உதவி செய்ய முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். நகராட்சி அதிகாரிகள் 20 ஆவது வார்டை புறக்கணித்து விட்டதாகவும், தண்ணீர் இணைப்பு கூட வழங்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தன்னை தேர்வு செய்தவர்களுக்கு உதவி செய்ய முடியாததற்கு இந்த நகராட்சி கூட்டத்திலேயே உயிரை விடுவது சிறந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவருக்கு தேர்தலின்போது தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு அளித்திருந்தது.

Leave A Reply

Your email address will not be published.