ஹரியாணா வன்முறை: 6 பேர் பலி, 116 பேர் கைது!

ஹரியாணா மாநிலம் நூ மாவட்டத்தில் நடைபெற்ற வன்முறையில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில முதல்வர் மனோஹர் லால் கட்டர் தெரிவித்தார்.

விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) ஊா்வலத்துக்கு சிலா் எதிா்ப்பு தெரிவித்து நிகழ்த்திய கல்வீச்சு கலவரமாக வெடித்தது. நூ மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறை, குருகிராமின் சோனா நகருக்கும் பரவிய நிலையில், அங்கு பிரிவு-57 பகுதியில் அமைந்துள்ள அஞ்சுமான் மசூதிக்குள் நள்ளிரவில் ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்தவா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. பின்னா் மசூதிக்கு தீ வைத்துள்ளனா்.

நூ மாவட்டத்தில் நிகழ்ந்த வன்முறையில் குா்சேவாக் கிராமத்தைச் சோ்ந்த நீரஜ் மற்றும் பதாஸ் கிராமத்தைச் சோ்ந்த சக்தி ஆகிய இரு ஊா்க்காவல் படை வீரா்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனா். 116 பேர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

நூ மாவட்டம் மற்றும் சோனா பகுதியில் நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளது. பொதுமக்கள் அமைதி மற்றும் சகோதரத்துவத்தை கடைப்பிடியுங்கள் என்று அம்மாநில முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

மாநில போலீஸாா் மற்றும் துணை ராணுவப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே 13 கம்பெனி துணை ராணுவப் படையினா் வரவழைக்கப்பட்ட நிலையில், மேலும் 6 கம்பெனி வீரா்கள் பாதுகாப்பு பணிக்காக வரவுள்ளனா்.

மேலும், நூ மாவட்டத்தில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் நூ மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.