அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் மொட்டு எம்.பி.! – முதலில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறும் வலியுறுத்து.

“ஒற்றையாட்சிக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் மாகாண சபைகளுக்கு அதிகாரங்களைப் பகிர்வதில் பிரச்சினை இல்லை. முதலில் மாகாண சபைத் தேர்தலை நடத்திவிட்டு, அதன்பிறகு அதிகாரப் பகிர்வு சம்பந்தமாகப் பேசலாம்.”

இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மூத்த உறுப்பினரான முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான சர்வகட்சி மாநாட்டில் நானும் பங்கேற்றிருந்தேன். 13 குறித்து தனித்து முடிவெடுக்கப்பட மாட்டாது, அது குறித்து நாடாளுமன்றம் தீர்மானிக்கட்டும் என ஜனாதிபதி கூறிவிட்டார். எனவே, 13 ஐ முன்னோக்கிக் கொண்டு செல்வதா அல்லது என்ன செய்வது என்பது குறித்து நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும்.

மாகாண சபைகளுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு மேலதிகமாக சிற்சில அதிகாரங்களைப் பகிர்வதில் பிரச்சினை கிடையாது என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.

நாடு பிளவு படாத வகையில் – ஒற்றையாட்சியைப் பாதுகாக்கும் வகையில் இதற்கான ஏற்பாடு இடம்பெற வேண்டும்.

அதேவேளை, நாட்டில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. அதனை நடத்தாமல் அதிகாரப் பகிர்வு பற்றி பேசி பயன் இல்லை. முதலில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அப்போது புதிதாக நியமனம் பெறும் முதலமைச்சர்கள் உள்ளிட்டவர்களுடன் அது பற்றி பேசலாம். மாகாண சபை முறைமை என்பது 1987 இல் இருந்து இருந்து வருகின்றது. அனைத்து கட்சிகளும் அந்த முறைமையை ஏற்றுக்கொண்டுள்ளன.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.