குருந்தூர்மலை விவகாரத்துக்குத் தீர்வு காணாவிடின் வன்முறையே வெடிக்கும் என்று மொட்டு எச்சரிக்கை.

“குருந்தூர்மலை விவகாரத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைந்து தீர்வு காண வேண்டும். இல்லையேல் அங்கு பௌத்தர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் வன்முறைதான் வெடிக்கும்.”

இப்படி எச்சரிக்கை விடுத்துள்ளது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் மேற்படி விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“குருந்தூர்மலை விகாரைக்குப் பேராபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு தமிழர்கள் புகுந்து சண்டித்தனம் காட்டுவதை ஏற்க முடியாது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பௌத்த மதத்தைப் பாதுகாக்க முன்வர வேண்டும். மகாநாயக்க தேரர்களின் ஆலோசனைகளுக்கு அமைய அவர் செயற்பட வேண்டும். தமிழ் அரசியல்வாதிகளின் சுயலாப அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஜனாதிபதி முக்கியவத்துவம் வழங்கக்கூடாது.

தமிழ் மக்களை உசுப்பேத்திக் குருந்தூர்மலைக்கு அழைத்து வந்து தங்கள் அரசியல் நாடகத்தைத் தமிழ் அரசியல்வாதிகள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

குருந்தூர்மலை விவகாரத்தை உங்கள் சுயலாப அரசியலுக்காகப் பயன்படுத்த வேண்டாம் என்று தமிழ் அரசியல்வாதிகளிடம் விநயமாகக் கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.