தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் வழங்கக்கூடாது: கர்நாடக பாஜகவினர் போராட்டம்

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கக்கூடாது என்று கர்நாடக பாஜகவினர் 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காவிரி நதியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. எனினும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகம் தர மறுப்பதாக தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டி வருகிறது.

இந்நிலையில், காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகம் முறையாக வழங்காத காரணத்தால் அண்மையில் நடைபெற்ற காவிரி மேலாண்மை வாரியக் கூட்டத்திலிருந்து தமிழக பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்துக்கு காவிரி நதியில் இருந்து உரிய நீரைத் திறந்துவிட வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் கடந்த வாரம் மனு தாக்கல் செய்தது.

காவிரி நீர் தொடர்பான வழக்கை விசாரிக்க புதிய அமர்வு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எய்.சந்திரசூட் இன்று(திங்கள்கிழமை) தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கக்கூடாது என்று கர்நாடக பாஜகவினர் மாண்டியா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 100க்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

முன்னதாக கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான பசவராஜ் பொம்மையும், கர்நாடகத்தில் தண்ணீர் தட்டப்பாடு உள்ள நிலையில் தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் வழங்கக்கூடாது என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.