மொட்டுவைப் பிளவுபடுத்த உள்ளேயும் வெளியேயும் சதி! – இடமளியோம் எனப் பஸில் சூளுரை.

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்திக் கட்சியைப் பல பிரிவுகளாகப் பிளவுபடுத்த உள்ளுக்குள் இருந்தும் வெளியில் இருந்தும் சிலர் சதித்திட்டம் தீட்டுகின்றனர். எந்தச் சதியாலும் மொட்டுக் கட்சியைப் பிளவுபடுத்த முடியாது என்பதை வெளிப்படையாகக் கூறிவைக்க விரும்புகின்றேன்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுநரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மொட்டுக் கட்சியை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற நோக்குடன் சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படுகின்றனர். அவர்களை நாம் இலகுவில் அடையாளம் கண்டுள்ளோம். அவர்களுக்கான தண்டனையை எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் வழங்குவார்கள்.

ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட அனைத்துத் தேர்தல்களையும் எந்நேரமும் எதிர்கொள்ள மொட்டுக் கட்சி தயாராகவுள்ளது.

ஒவ்வொரு தேர்தல்களிலும் தரமான வேட்பாளர்கள் களமிறங்குவார்கள். மொட்டுக் கட்சி தோற்ற சந்தர்ப்பம் எக்காலத்திலும் இருக்கமாட்டாது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.