குருந்தூர்மலைக் குழப்பங்களின் பின்னணியில் பாரதீய ஜனதாக் கட்சியா? – அமெரிக்கத் தூதுவர் இப்படி சந்தேகம்.

முல்லைத்தீவு, குருந்தூர்மலைச் சர்ச்சையில் இந்தியாவின் இந்துத்துவா அமைப்பான பாரதீய ஜனதாக் கட்சியின் தாக்கம் அல்லது பின்னணி உண்டா என அமெரிக்கத் தூதுவர் நேற்றுத் தம்மை யாழ்ப்பாணத்தில் சந்தித்த தமிழ்ப் பிரதிநிதிகளிடம் வினாவினார் என அறியவந்தது.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ஜூலி சுங் நேற்று தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலரையும் யாழில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

யாழ்ப்பாணம் – கொக்குவிலில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் ஆகியோருடன் அவர் கலந்துரையாடினார். இதன்போதே அமெரிக்கத் தூதுவர் மேற்படி சந்தேகத்தை வினாவியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த சி.வி.கே. சிவஞானம், “அப்படி ஒரு பின்னணியும் கிடையாது. இது அரசின் – ஆளும் தரப்பின் ஒரு வஞ்சகச் செயற்பாட்டுக்கு எதிராக இயல்பாகக் கிளர்ந்த தமிழ் மக்களின் மன எண்ணம்” – என்று தெளிவுபடுத்தினார்.

இதேநேரம் குருந்தூர்மலை விடயத்தையொட்டி, நாடாளுமன்றச் சிறப்புரிமையைப் பயன்படுத்தி சரத் வீரசேகர நாடாளுமன்றில் ஆற்றிய உரை சுட்டிக்காட்டப்பட்டது. இதனை வெளியில் அவரால் பகிரங்கமாகக் கூற முடியுமா? வெளியில் கூறினால் ரஞ்சன் ராமநாயக்க போன்று அவரும் சிறை செல்லும் நிலை ஏற்பட்டிருக்கும் என்ற விடயமும் அமெரிக்கத் தூதுவருக்குச் சுட்டிக்காட்டப்பட்டதாகத் தெரியவந்தது.

1 Comment
  1. விஸ்வநாத ஐயர் மஹேஸ்வரசர்மா says

    இந்தியாவில் மதப் பிரச்சனைகளை வைத்து ஆட்சி நடக்கிறது அதுவும் தமிழ்நாட்டில் தான் தி மு க தான் அதற்கும் ஆதரவாக அமெரிக்கா தான் உள்ளது
    இலங்கையிலும் வந்து விட்டார்களா?பணம் கொடுத்து பிரிவினைகளைத் தூண்டுபவர்களில் முதன்மை ஆனவர்கள் அமெரிக்கர்கள் மக்களிடம் பேசிப் பிரச்சனைகளை ஆரம்பிப்பார்கள்

Leave A Reply

Your email address will not be published.