சு.கவிலிருந்து தயாசிறி தூக்கிவீசப்பட்டமை ஏன்? – மைத்திரியைப் போட்டுத் தாக்குகிறார் கம்மன்பில.

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைக்கும் முயற்சிக்குத் தயாசிறி ஜயசேகர தடையாக இருந்த காரணத்தால்தான் அவரைக் கட்சியில் இருந்து மைத்திரிபால சிறிசேன நீக்கியுள்ளார்.”

இவ்வாறு பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

எதுல்கோட்டை பகுதியில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன எவருக்கும் உண்மையாக இருக்கமாட்டார் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒரு நாள் இரவு மஹிந்த ராஜபக்ஷ உட்பட ராஜபக்ஷர்களுடன் ஒன்றிணைந்து அப்பம் சாப்பிட்டு விட்டு மறுநாள் காலை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராகப் போட்டியிடுவதாக மைத்திரிபால அறிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கூட மைத்திரிபால சிறிசேன உண்மையாக இருக்கவில்லை.

அரசமைப்புக்கு முரணாக மஹிந்த ராஜபக்ஷவைப் பிரமராக்கி நாட்டில் பாரிய அரசியல் நெருக்கடிகளைத் தோற்றுவித்தவரே மைத்திரிபால.

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படும் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து கடந்த ஜனவரி மாதம் ஹெலிகொப்டர் சின்னத்தில் புதிய அரசியல் கூட்டணியை அமைத்தோம்.

கூட்டணியில் ஒன்றிணைந்து செயற்படுவதாகக் குறிப்பிட்டு விட்டு உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் உயர்நீதிமன்றம் அவருக்கு நட்டஈடு விதிக்கப்பட்டதன் பின்னர் கூட்டணியில் இருந்து மைத்திரிபால விலகினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைக்கும் முயற்சியை அமைச்சுப் பதவி வகிக்கும் சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் முன்னெடுத்துள்ளார்கள். இதற்குக் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த தயாசிறி ஜயசேகர தடையாக இருந்ததாலேயே தற்போது அவரைக் கட்சியின் பதவியில் இருந்தும், உறுப்புரிமையில் இருந்தும் மைத்திரிபால நீக்கியுள்ளார்.

ஆகவே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன இவ்வாறு செயற்பாடாமல் இருந்தால்தான் ஆச்சரியடைய வேண்டும்.

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படும் அரசியல் தரப்பினரை ஒன்றிணைத்து பலமான அரசியல் கூட்டணியை வெகுவிரைவில் ஸ்தாபிப்போம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.