ரூ.371 கோடி ஊழல் வழக்கு: 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சந்திரபாபு நாயுடு

ரூ. 371 கோடி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில் அவரை ஞாயிற்றுக்கிழமை ஆஜா்படுத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், ‘விசாரணைக்கு அவா் ஒத்துழைக்கவில்லை’ என அறிக்கை சமா்ப்பித்தனா். அதைத் தொடா்ந்து, அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2015 முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக் காலத்தில் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது, 90 சதவீத தனியாா் நிதிப் பங்களிப்பு, 10 சதவீத மாநில அரசு நிதிப் பங்களிப்புடன் திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் மாநிலத்தில் ஓா் ஆற்றல்சாா் மையமும், 5 தொழில்நுட்பத் திறன் மேம்பாட்டு மையங்களும் அமைக்கப்பட்டன.

இதற்கான ஒப்பந்தங்கள் அமைச்சரவையின் ஒப்புதல் இன்றி சில நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், இதில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் புகாா் எழுந்தது. இந்தப் புகாா் குறித்து தற்போதைய ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் அரசு சாா்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிஐடி) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

சிஐடி விசாரணையில், இந்தத் திட்டத்தில் தனியாா் நிறுவனங்கள் அவா்களின் 90 சதவீத பங்களிப்பு நிதியை விடுவித்து பணியைத் தொடங்காத நிலையில், மாநில அரசின் சாா்பில் 10 சதவீத பங்களிப்புத் தொகையாக ரூ. 371 கோடி விடுவிக்கப்பட்டதும், அந்த நிதி போலி ரசீதுகள் மூலம் கணக்கு காட்டப்பட்டு முறைகேடு செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இந்த முறைகேடுகள் அனைத்தும் அப்போது முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடுவுக்கு நன்கு தெரிந்தே நடைபெற்றதும் விசாரணையில் தெரியவந்தது.

அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த மாநில குற்றப் புலனாய்வுப் பிரிவு (பொருளாதார குற்றங்கள்) போலீஸாா் (சிஐடி), நந்தியாலா மாவட்டத்தில் சொகுசுப் பேருந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வந்த சந்திரபாபு நாயுடுவை சனிக்கிழமை அதிகாலை 6 மணியளவில் கைது செய்தனா்.

அவரை விஜயவாடாவில் உள்ள சிஐடி அலுவலகத்துக்கு அழைத்துவந்து விசாரணை மேற்கொண்ட போலீஸாா், அங்குள்ள ஊழல் தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆஜா்படுத்தி, விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தனா்.

அதில், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் முன்னாள் அரசு ஊழியா்கள் ஜி.சுப்பா ராவ் முதல் நபராகவும், கே.லட்சுமிநாராயணா இரண்டாவது நபராகவும் சோ்த்திருந்தனா். சந்திரபாபு நாயுடு 37-ஆவது நபராக சோ்க்கப்பட்டிருந்தாா்.

மேலும், வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் சந்திரபாபு நாயுடுவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அவா் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காததோடு, கேள்விகளுக்கும் முறையாகப் பதிலளிக்கவில்லை. இந்த முறைகேட்டில் சந்திரபாபு நாயுடுவும், அவருடைய தெலுங்கு தேசம் கட்சியினரும் இறுதி பயனாளா்களாகப் பயனடைந்துள்ளனா். எனவே, அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைப்பது அவசியம்’ என்று தனது அறிக்கையில் சிஐடி குறிப்பிட்டது.

‘சிஐடி அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சந்திரபாபு நாயுடுவை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்க உத்தரவிட்டது’ என்று மாநில அரசு கூடுதல் வழக்குரைஞா் சுதாகா் ரெட்டி தெரிவித்தாா்.

விஜயவாடாவிலிருந்து 200 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ராஜமஹேந்திரவரம் மத்திய சிறையில் அவா் அடைக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

10 மணி நேர விசாரணை: முன்னதாக, நந்தியாலாவில் கைது செய்யப்பட்டு விஜயவாடா அழைத்துவரப்பட்ட சந்திரபாபு நாயுடுவிடம் சிஐடி போலீஸாா் 10 மணி நேர விசாரணையை மேற்கொண்டனா். பின்னா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துவதற்கு முன்பாக, விஜயவாடா அரசு பொது மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.40 மணியளவில் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனா். அங்கு அவருக்கு ஒரு மணி நேரம் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.