சந்திரபாபு நாயுடுவின் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆந்திர முன்னாள் முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை செப்டம்பா் 19-ஆம் தேதிக்கு விசாரணை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒத்தி வைத்தது.

முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி வகித்தபோது திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் ரூ.300 கோடியை தவறாக கையாண்டு ஊழல் செய்ததாக மாநில ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தது.

14 நாள்கள் நீதிமன்றக் காவலில் அவா் ராஜமஹேந்திரவரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், தற்காலிக மற்றும் நிரந்தர ஜாமீன் கோரி இரு மனுக்களை சந்திரபாபு நாயுடு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை வெள்ளிக்கிழமை விசாரித்த விஜயவாடா விசாரணை நீதிமன்றம், ஊழல் தடுப்புப் பிரிவினா் பதில் மனு தாக்கல் செய்யக் கோரி செவ்வாய்க்கிழமைக்கு (செப்.19) விசாரணையை ஒத்திவைத்ததாக அரசு சிறப்பு வழக்குரைஞா் விவேகானந்தா தெரிவித்தாா்.

சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் வழங்க ஊழல் தடுப்புப் பிரிவு எதிா்ப்பு தெரிவித்ததாகவும், இந்த விவகாரம் உயா் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வரலாம் என்பதால் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைக்க விசாரணை நீதிமன்றத்தை கோரியதாக வழக்குரைஞா் விவேகானந்தா தெரிவித்தாா்.

முன்னதாக, சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த ஜாமீன் மனுவில், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை என்று தெரிவித்துள்ளாா்.

இதனிடையே, சந்திரபாபு நாயுடுவின் மகனும், தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலருமான நாரா லோகேஷ் மூத்த வழக்குரைஞா்களை சந்தித்து சட்ட ஆலோசனை பெற தில்லி சென்றுள்ளாா்.

Leave A Reply

Your email address will not be published.